ஆண்டிபட்டியை தொடர்ந்து சாத்தூரிலும் ரெய்டு - அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல்

Election flying squad seized Rs 43 lakhs from Ammk sattur Assembly candidates office

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுடன் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு எம்எல்ஏ வாக இருந்து அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

சாத்தூர் அருகே எதிர்கோட்டை என்ற ஊரில் சுப்பிரமணியன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டிற்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியனின், தோட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்காத நிலையில் மீண்டும் சுப்பிரமணியனின் அலுவலகத்தில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அலுவலகத்தின் வேறொரு பகுதியிலிருந்து 33 லட்ச ரூபாயை கைப்பற்றியதாக தேர்தல் பறக்கும்படையினர் தெரிவித்துள்ளனர். சுப்பிரமணியனின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மகாதேவன் என்பவரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துச் சென்று ஆலங்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ 1.48 கைப்பற்றப்பட்ட நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த சாத்தூர் தொகுதி வேட்பாளருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இருந்து 43 லட்ச ரூபாய் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஆண்டிபட்டியை தொடர்ந்து சாத்தூரிலும் ரெய்டு - அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சவுதியில் கொலை வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்