பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்!

India Needs Pradhan Mantri Not Prachar Mantri, Says Akhilesh Yadav

பிரதமர் நரேந்திர மோடியை ‘பிரச்சார மந்திரி’ என்று பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவும் விமர்சித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக, தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்கள்தான், பெரிய தலைவர்களைப் பற்றி கிண்டலாக பேசுவார்கள். ஆனால், இந்த தேர்தலில் பிரதமர் மோடி முதல் எல்லா கட்சித் தலைவர்களுமே மற்றவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி கிண்டல் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது, சந்திரபாபு நாயுடுவை ‘யூ டர்ன் பாபு, கரெப்ஷன் பாபு’ என்று கிண்டலடித்தார். அதே போல், மம்தா பானர்ஜியை ஒரு ‘குண்டர்’ என்றும், வளர்ச்சி்த் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ‘ஸ்பீடுபிரேக்கர்’ என்றும் குறிப்பிட்டார். சிதம்பரத்தை ‘ரீ கவுன்டிங் மினிஸ்டர்‘ என்று கிண்டலடித்தார்.

இதே போல், காவலாளி என்று தன்னை பெயர் சூட்டிக் கொண்ட பிரதமர் மோடியை, ‘திருடன்’ என்று ராகுல் மிக மோசமாக குறிப்பிட்டார். இந்நிலையில், உ.பி. மாநிலம் பந்தல்கந்த் மாவட்டம், பாண்டாவில் பிரியங்கா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆனால், நாளைக்கு இங்கு வரப் போகும் மோடிக்காக லாரிகளில் குடிநீரைக் கொண்டு வந்து கொட்டி சாலையை சுத்தம் செய்கிறார்கள். அவர் சவுக்கிதாரா?(காவலாளி) அல்லது ஷாஹென்சாவா?(பேரரசர்). அவர் பிரதான மந்திரி(பிரதமர்) அல்ல. பிரதான பிரச்சார மந்திரி. அவர் எப்போதும் தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்பவர்’’ என்று கிண்டலடித்தார்.

இதே போல், ஹர்தோய் பகுதியில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘நாட்டுக்கு தேவை பிரதான மந்திரி தானே தவிர, பிரச்சார மந்திரி அல்ல’’ என்று மோடியை கிண்டலடித்தார்.

You'r reading பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 25 ஆயிரம் குடும்பங்களுக்கு...3 சென்ட் வீடு இலவசம்! – செந்தில்பாலாஜி 'அதிரடி'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்