மல்லுக்கட்டும் திமுக.. அதிமுக.. அமமுக ..! குன்றத்தில் கொடி நாட்டப் போவது யார்?

Tiruparankundram by-election: heavy fight between Dmk, admk, Ammk

இதோ.. அதோ.. என ஒரு வழியாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி 3 வருடத்தில் 3-வது தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. மே 19-ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடாகி விட்டது.

2016-ல் நடந்த பொதுக் தேர்தலில் இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேல், தேர்தல் முடிந்த சில நாளில் உடல் நலம் குன்றி கோமா நிலையில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் அவர் பெற்றிபெற்றாலும், வெற்றிச் செய்தியை கேட்காமலே உயிர் பிரிந்து விட்டது. அதன் பின் 2016 இறுதியில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஏ.கே. போசும் கடந்தாண்டு மரணமடைய தொகுதி மீண்டும் காலியாகி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கு போட்டியிடும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக ஆகியவை வேட்பாளர்களையும், தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்களையும் நியமித்து, பிரச்சாரக் களத்திலும் குதித்து விட்டதால், மும்முனைப் போட்டியில் தொகுதியில் அனல் பறக்கத் தொடங்கி விட்டது.


திமுக தரப்பில் கடந்த இடைத் தேர்தல் இங்கு போட்டியிட்டு தோற்ற டாக்டர் சரவணனே மீண்டும் போட்டியிடுகிறார். பணபலம் படைத்தவர், மக்களிடம் நல்ல பிரபலமானவர் என்பதுடன், எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என திமுக மேலிடமும் கூடுதல் கவனம் செலுத்துவதால் தெம்பாக வலம் வருகிறார் டாக்டர் சரவணன். மேலும் தொகுதிப் பொறுப்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியை நியமித்து, அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என பெருந்தலைகளை களத்தில் இறக்கி விட்டுள்ளதால் திமுக தரப்பு பிரச்சார ரேசில் முந்தி ஓடுகிறது.

அதிமுக தரப்பில் வேட்பாளராகியுள்ள முனியாண்டி, தேர்வானதே ஒரு அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். வேட்பாளர் தேர்வின்போது, துணை முதல்வர் ஓபிஎஸ், மாவட்ட அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயக்குமார், மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா என ஒவ்வொருத்தரும், தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கொடி பிடிக்க,வேட்பாளர் தேர்வில் பெரும் அடிபிடியே ஏற்பட்டது. இதனால் வெறுத்துப் போன முதல்வர் எடப்பாடி, பெருந்தலைகளின் சிபாரிசுகளை நிராகரித்து, கட்சியின் அடிமட்ட தொண்டனான முனியாண்டியை வேட்பாளராக்கி விட்டார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதி செயலாளரான முனியாண்டி,ஒப்புக்குத் தான் விருப்ப மனு செய்திருந்தார். கட்சியின் மேல் மட்ட கோஷ்டிப் பூசலால் அதிர்ஷ்டம் அடித்து வேட்பாளராகிவிட்டார்.


முனியாண்டி உள்ளூரைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் தீவிர விசுவாசி மற்றும் தொகுதியில் கணிசமாக உள்ள பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் பெரும் மைனசாக உள்ளது. கடைசி நேரத்தில் கட்சி மேலிடம் வாரி இறைக்க உள்ள பணப்பட்டுவாடா முனியாண்டியை கரை சேர்த்து விடும் என்பதே அதிமுக தரப்பின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.


திமுக, அதிமுகவுக்கு இணையாக திருப்பரங்குன்றத்தில் சரிசமமாக மல்லுக்கட்ட கட்சியின் மாவட்டச் செயலாளரான இ.மகேந்திரனை களமிறக்கியுள்ளது டிடிவி தினகரனின் அமமுக .உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மகேந்திரனும் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், சொந்த பந்தங்கள் அதிகம் இருப்பதால் அச்சமூக வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்து விடலாம் என்று கருதுகிறது அமமுக . மேலும் அதிமுக உட்பூசலால், அமமுக பக்கம் வாக்குகள் திசை மாறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தேர்தல் பணிக்கு தங்க .தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் போன்ற முக்கியத் தலைகளை களமிறக்கி, கடைசி கட்டத்தில் அதிமுகவுக்கு சளைக்காமல் பணப் பட்டுவாடா செய்யும் திட்டத்துடன், களத்தில் இப்போதே படு சுறுசுறுப்பாக இருப்பது அமமுக தரப்பு மட்டுமே என்று தான் கூற வேண்டும்.

இப்படி திமுக, அதிமுக, அமமுக இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பரங்குன்றத்தில் வெற்றிக்கனியை பறிக்க போட்டா போட்டி நடக்கிறது. ஆனால் வாக்காள ஜனங்கள் மத்தியிலோ, எந்தக் கட்சி எவ்வளவு கொடுக்கும் ?எத்தனை கட்டமாக பட்டுவாடா நடத்தப் போகிறார்கள்? என்பது பேச்சுக்கள் தான் பலமாக விவாதமாகியுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் அரசியல் சதுரங்க ஆட்டம் பற்றி தெரியுமா?

You'r reading மல்லுக்கட்டும் திமுக.. அதிமுக.. அமமுக ..! குன்றத்தில் கொடி நாட்டப் போவது யார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கை பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்