ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் ஊராட்சி சபை பாணியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

Dmk President mk Stalin interact with wipublic in ottapidaram by-election campaign

இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை நடத்திய பாணியில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டு கலந்துரையாடியது வித்தியாசமாக அமைந்தது.

இம்மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இன்று ஒட்டப்பிடாரத்தில் மு.க.ஸ்டாலினும், சூலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரனும் இன்று பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

இன்றைய பிரச்சாரத்திற்காக நேற்றே ஒட்டப்பிடாரத்திற்கு வந்த மு.க ஸ்டாலின் திடீரென வீதிகளில் நடந்து சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் சிறிது நேரம் ஈடுபட்டார். இன்று மாலையோ, தான் ஏற்கனவே கிராமம் கிராமமாக நடத்திய ஊராட்சி சபை பாணியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, தேர்தல் பிரச்சாரத்தை வித்தியாசமாக முன்னெடுத்துச் சென்று அசத்தினார்.

ஒட்டப்பிடாரம்இந்திரா குடியிருப்பு காலனியில், அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அனைவரையும் திமுக நிர்வாகிகள் ஒன்று திரட்டியிருந்தனர். தொகுதி திமுக வேட்பாளர் சின்னையா, தொகுதிப் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் சகிதம் மேடையில் அமர்ந்தார் மு.க.ஸ்டாலின் .அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளை மேடைக்கு அழைத்து, மைக் கொடுத்து குறைகளை கூறச் சொல்லி குறிப்பும் எடுத்துக் கொண்டார் மு.க.ஸ்டாலின் . இதனால் பலரும் ஆர்வமுடன் மேடையில் ஏறி தங்கள் பகுதி குறைகளைக் கூறியதுடன், கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.

பொதுவாக தேர்தல் பிரச்சாரம் என்றால் தலைவர்கள் பேச, அதனைக் கேட்க பொதுமக்கள் திரள்வது தான் வழக்கமான ஒன்று. ஆனால் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை வித்தியாசமான முறையில், மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக மாற்றியது அந்தப் பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

You'r reading ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் ஊராட்சி சபை பாணியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன்; ஆனால்... தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்