5 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி பிரஸ் மீட் - ஆனால்...? - கேள்விக்கு பதிலளிக்கவில்லை!

After 5 years PM Modi meets press, but not answering to any questions

பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது.

2014-ல் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, 5 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை என்ற புகாருக்கு ஆளானவர்.தனிப்பட்ட முறையில் சில செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தாரே தவிர, முந்தைய காலகட்டங்களில் பிரதரமாக இருந்தவர்கள் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள் வெளியிடும் போது செய்தியாளர்களைச் சந்தித்து, சந்தேகங்கள்,கேள்விகளுக்கு பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் 7 கட்டமாக அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவடையும் நாளான இன்று திடீரென பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் தன்னுடைய உரையை மட்டுமே பிரதமர் மோடி வாசித்தார் அப்போது பிரதமர் மோடி கூறுகையில், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல. 5 பல தடைகளை தாண்டி வெற்றியும் பெற்றுள்ளோம். இந்தத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று தன் மெஜாரிட்டியுடன் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். ஐந்து வருடம் ஒத்துழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. என்றார் மோடி.

இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளிப்பார் என்று அவர் பக்கம் கேள்விகளை கேட்குமாறு கூறி ஒதுங்கிக் கொண்டார் பிரதமர் மோடி. அமித் ஷா பதிலக்கையில், 5 ஆண்டுகளில் பாஜக வழங்கிய நலத்திட்டங்கள் வெற்றியைத் தரும். 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த முறை தென் மாநிலங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.கோட்சே பற்றி கருத்து கூறிய பிரக்யா சிங் தாகூருக்கு, 10 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது விளக்கத்தை பொறுத்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுக்கும்.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பிரதமர் பதிலளிக்க வேண்டியதில்லை. இதில் விவாதம் நடத்த எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்ற அமித்ஷா, சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார். இதில் சர்ச்சைக்குரிய கேள்விகள் எதையும் கேட்காமல் செய்தியாளர்களும் தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தியும் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பை தொலைக்காட்சி நேரலையில் பார்த்தபடி இருந்த ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் தாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பை விமர்சனம் செய்தபடியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading 5 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி பிரஸ் மீட் - ஆனால்...? - கேள்விக்கு பதிலளிக்கவில்லை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சங்க நில விற்பனை முறைகேடு! சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்