ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்!

Ex. police constable was arrested in ops son culvert issue

ஓட்டு எண்ணும் முன்பே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி தான் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, குச்சனூரில் அன்னபூரணி கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கல்வெட்டுகள் வைக்கப்பட்டன. அதில் ஒன்றில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் பெயர்களை பொறித்திருந்தனர். அதில் ரவீந்திரநாத் பெயருக்கு மேலே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்டிருந்தது. இது வாட்ஸ் அப்பில் படத்துடன் வெளியாகி வைரல் ஆனது. ஓட்டு எண்ணும் முன்பே எப்படி எம்.பி. என்று குறிப்பிடலாம் என்று சர்ச்சை ஆனது.

இந்நிலையில், ரவீந்திரநாத் இன்று அளித்த விளக்கத்தில் கல்வெட்டில் தேவையில்லாமல் எம்.பி. என்று பெயர் எழுதி என் பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சின்னமனூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கோயில் நிர்வாகி வேல்முருகனை கைது செய்தனர்.

இந்த வேல்முருகன் முன்னாள் காவலர் ஆவார். பல சர்ச்சைகளிலும், சாதனைகளும் புரிந்தவர். ஆறு, கடலில் நீண்ட தூரம் நீந்தி சாதனை படைத்தவர். கையில் காரையும், வயிற்றில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றி சாதித்தவர். ஒரு முறை ஜெயலலிதாவிடம் விருது பெற்றுள்ளார்.

ஜெயலலிதா மறைந்தவுடன் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இப்படி பல முறை காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியதால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது ஓ.பி.எஸ். மகனுக்கு ஓவர் விசுவாசம் காட்டிய இவர் கைதாகியுள்ளார்.

‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!

You'r reading ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் பிரஸ் மீட்! டெலிகிராப் கிண்டல்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்