கருத்துக் கணிப்பை திணிப்பு என்ற எடப்பாடி..! மக்களின் மனநிலை என்ற ஓபிஎஸ்...! யார் சொல்றது சரி..? லடாய் ஆரம்பம் !

Exit poll results, admk leaders ops welcomes and EPS opposes :

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் நாடு முழுவதுமே கட்சிகளிடையே ஒரு வித குழப்பமும், சந்தேகங்களும் எழுந்து சர்ச்சையாகிக் கிடக்கிறது. தமிழகத்திலோ இந்த கருத்துக் கணிப்பை சாதகமாகவோ, பாதகமாகவோ எடுத்துக் கொள்ள முடியாத நெருக்கடியில் இரு பெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இக்கட்டான சூழலில் உள்ளன.

தமிழகத்தில் திமுக கூட்டணி தான் அமோக வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறியதை அக்கூட்டணியினரால் சந்தோசமாக ரசிக்க முடியவில்லை. ஏனெனில் மத்தியில் காங்கிரசுக்கு சாதகமில்லை என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுவதால் இதனை ஏற்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இக்கட்டான சூழலை உருவாக்கி விட்டது. இதனாலேயே, கருத்துக் கணிப்புகளை எப்போதும் நம்புவதுமில்லை, ஏற்பதுமில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரேயடியாகச் சொல்லிவிட்டார்.

அதிமுக தரப்பிலும் அதே நிலைமை தான்.மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற கருத்துக் கணிப்பு முடிவு அதிமுகவுக்கு சந்தோசமான விஷயம் தான் என்றாலும், தமிழகத்தில் அதிமுக படுதோல்வியடையும் என்று கூறப்பட்டுள்ளது பெருத்த இடியாகிப் போய் உள்ளது. இதனால் வெறுத்துப் போன முதல்வர் எடப்பாடி நேற்று சேலத்தில் பேட்டியளிக்கும் போது, கருத்துக் கணிப்பை 'கருத்துத் திணிப்பு' என்று விமர்சித்த ததுடன், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்றும் அள்ளி வீசினார்.

இந்நிலையில் டெல்லியில் பாஜக விருந்தில் பங்கேற்கக் கிளம்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடியின் கருத்துக்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதே? என்று கேட்டதற்கு, மக்களின் மனநிலையைத் தான் பிரதிபலித்துள்ளது என்று கூலாகக் கூறி எடப்பாடியை கடுப்பேற்றியுள்ளார்.

ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓபிஎஸ் பாஜகவுக்கு தாவப் போகிறார் என்ற செய்திகளால் அவர் மீது அதிமுகவில் மேல் மட்ட தலைகள் முதல் கீழ் மட்ட தொண்டர்கள் வரை சந்தேகக் கண்கொண்டு பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் எதிரெதிர் கருத்துக்களை கூறியது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பை அதிகரிக்கத்தான் செய்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் பெரும் பிரளயம் வெடிக்கத்தான் போகிறது என அதிமுக முக்கியப் புள்ளிகள் சிலர் இப்போதே புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

மோசடி கருத்துக் கணிப்பை புறந்தள்ளுங்க... ஓட்டு எண்ணிக்கையில கவனமா இருங்க...! உஷார்படுத்தும் டிடிவி தினகரன்

You'r reading கருத்துக் கணிப்பை திணிப்பு என்ற எடப்பாடி..! மக்களின் மனநிலை என்ற ஓபிஎஸ்...! யார் சொல்றது சரி..? லடாய் ஆரம்பம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியை மிரட்டுகிறாரா தோப்பு வெங்கடாசலம்? மே 23க்குள் சமரசம் ஏற்படுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்