எதிரிக்கு எதிரி நண்பர்: ஜெகனுடன் சந்திரசேகர் ராவ் கைகோர்ப்பு

Telangana c.m. chandrasekara rao will attend jagan mohans swear in ceremony

அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பார்முலா நன்றாக செயல்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருக்கமாகி வருகிறார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது, 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத்தே இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும் என்று ஆந்திர சீரமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுடன் தினமும் சண்டை போட்டு, அவரை ஐதராபாத்தில் இருந்து துரத்துவதிலேயே குறியாக இருந்தார். ஒரு கட்டத்தில் நாயுவும், ஐதராபாத்தை காலி செய்து விட்டு, அமராவதியில் தற்காலிக தலைமைச் செயலகத்தை அமைத்து அங்கு சென்று விட்டார். அதன்பின்பும், சந்திரபாபு நாயுடுவுக்கும், சந்திரசேகர ராவுக்கும் தொடர்ந்து பகை நீடித்து வந்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக வரும் 30ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். ஜெகன் வெற்றி பெற்றதும் ஐதராபாத்துக்கு வந்து கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகனை உற்சாகத்துடன் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார்.

அப்போது தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ராவுக்கு ஜெகன் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் நாளை(மே29) விஜயவாடாவுக்கு செல்கிறார். அங்கு கனக துர்கா கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்து விட்டு, அன்றிரவு அங்கு தங்குகிறார். அதன்பின், மறுநாள்(மே30) காலையில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கும் விழாவில் ராவ் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து, அன்று மாலையில் ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் இரு மாநில கவர்னர் நரசிம்மன் ஆகியோர் புதுடெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் அவர்கள் பங்கேற்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு மீது கிரிமினல் வழக்கு போடும் அளவுக்கு சென்ற சந்திரசேகர ராவ், தற்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ஜெகன்மோகனுடன் மிகவும் நெருக்கமாகி வருகிறார்.

You'r reading எதிரிக்கு எதிரி நண்பர்: ஜெகனுடன் சந்திரசேகர் ராவ் கைகோர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏழுமலையானை தரிசித்தார் எடப்பாடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்