பதவி விலகாதீர்கள் ராகுல்... ஸ்டாலின், ரஜினி வேண்டுகோள்

Rahul, dont resign party president post says stalin and rajini

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ள நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ஸ்டாலினும், ரஜினியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை விட நேரு, ராஜீவ்காந்தி ஆகியோரையும், குடும்ப அரசியலையும் கடுமையாக விமர்சித்தனர். இதில், ராகுல்காந்தி உள்பட சோனியா குடும்பத்தினர் மிகவும் மனம் வருந்தினர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் நாட்டுப் பிரச்னையால் உயிரைத் தியாகம் செய்ததை இப்போது எல்லோரும் துச்சமாக கருதுகிறார்கள் என்று கவலைப்பட்டனர்.

தற்போது, பா.ஜ.க. இந்த தேர்தலில் இன்னும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், குடும்ப அரசியல் என்ற பிரச்சாரத்தை தடுப்பதற்காகவே கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல்காந்தி முடிவெடுத்தார். செயற்குழு கூட்டத்தில் அவர் அதை அறிவித்த போது, மூத்த தலைவர்கள் அதை ஏற்கவில்லை. எனினும், ராகுல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று(மே28) ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம், ‘தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருந்தாலும் மக்களின் மனங்களில் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டு விடுங்கள்’ என்று கேட்டு கொண்டார். இதன்பிறகு, தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றதற்காக ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘‘ராகுல்காந்திக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. காங்கிரசில் பழம்பெரும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை கையாள்வது சிரமம், அவர்கள் ராகுலுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்கள் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை. ஆனாலும், ராகுல்காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது. இந்தியாவில் பிரதமர் பதவி எவ்வளவு முக்கியமோ, அதை போல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானது. எனவே, ராகுல் அந்த பொறுப்பை விட்டு விலகக் கூடாது’’ என்றார்.

You'r reading பதவி விலகாதீர்கள் ராகுல்... ஸ்டாலின், ரஜினி வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்டம் ஆரம்பம். திரிணாமுல் எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் இழுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்