மோடி மீண்டும் பதவியேற்பு அமித்ஷா அமைச்சர் ஆனார்

Narendra Modi Takes Oath As PM For Second Term, Amit Shah Joins Cabinet

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அமைச்சராக பதவியேற்றார். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் விழாவில் பங்கேற்றவர்கள் ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து. கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவிவகித்த ராஜ்நாத்சிங் பதவியேற்றார். அடுத்ததாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அவர் பதவியேற்க எழுந்த போதும் விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நிதின்கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், தவார்சந்த் கெலாட், ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜன் முண்டா, ஸ்மிருதி இரானி, ஹர்ஷ்வர்த்தன், பிரகாஷ் ஜவடேகர் என்று வரிசையாக அமைச்சர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் இந்தியில் கடவுள் பெயரில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் வங்கதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் உள்பட ‘பிம்ஸ்டிக்’ அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், மற்றும் மாநில முதல்வர்கள் உள்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முறை பா.ஜ.க.கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என்று சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டதால், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அரங்கில் நடைபெறாமல் வெளியே புல்வெளியில் நடைபெற்றது.

You'r reading மோடி மீண்டும் பதவியேற்பு அமித்ஷா அமைச்சர் ஆனார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரத்பவாருடன் ராகுல் திடீர் சந்திப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்