காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு - ராகுல் பிடிவாதம் நீடிக்கிறது

Sonia Gandhi elected as leaders of congress parliamentary party:

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தப் பதவியையும் ஏற்க சம்மதிக்காததால் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெறுமனே 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதனால் சோனியா, ராகுல் ஆகியோர் எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமல் மல்லிகார்ஜுன கார்கேவை அந்தப் பொறுப்பில் அமர்த்தினர். இந்தத் தேர்தலிலும் கடந்த முறையை விட 8 தொகுதிகளை கூடுதலாகப் பெற்று 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனாலும் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு இந்த தொகுதிகள் போதுமானவையாக இல்லை.

இந்நிலையில், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், புதிதாக தேர்வான எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ராகுல் காந்தியை, நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதற்கும் ராகுல் காந்தி சம்மதிக்கவில்லை. இதனாலேயே வேறு வழியின்றி சோனியா காந்தி நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடந்த எம்.பிக்கள் கூட்டத்திலும் சிறிது நேரமே பங்கேற்ற ராகுல் காந்தி கூட்டம் முடியும் முன்பே வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

You'r reading காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு - ராகுல் பிடிவாதம் நீடிக்கிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அது மத்திய அரசு ஓட்டு மிஷின் ... இது மாநில அரசு எந்திரம்... கர்நாடக உள்ளாட்சி தேர்தல் பற்றி காங்.கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்