உஷ்.. கப்சிப்னு இருக்கணும்- அதிமுகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

Admk minister Jayakumar requests party men not to speak internal issues in public:

ஓபிஎஸ், இபிஸ் ஆகியோரின் வேண்டுகோள்படி, அதிமுகவினர் யாரும் கட்சி விவகாரத்தை வெளியில் பேசாமல் கப்சிப் என அடக்கமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. யாருக்கு அதிகாரம் என்பதில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளில் மோதல் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டி விட்டது எனலாம்.

இதனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராசன் செல்லப்பா , போர்க்கொடி தூக்கியது சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.ராசன் செல்லப்பாவின் கருத்துக்கு அமைச்சர்கள் பலரும் ஆளாளுக்கு எதிர்க்கருத்து கூற, அதிமுகவில் கலகம் வெடிக்கும் சூழ்நிலைக்கு சென்று விட்டது. இதனால் திடீரென 12-ந் தேதி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைகள் எதுவாகினும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கலாம். பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை விட்டனர்.

ஆனாலும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் ராசன்செல்லப்பா, இன்று திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தை திடீரென கூட்டியது பரபரப்பாகி விட்டது. தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராசன்செல்லப்பா, இன்றும் ஏதேனும் கலகக் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், கட்சியின் தலைவரை நாம் தான் தேர்ந்தெடுத்ததாக இருக்க வேண்டும். அதிமுக பிளவுபடுத்த சிலர் சதி செய்கிறார்கள் என்ற ரீதியில் பேசி முடித்துக் கொண்டார். இதற்குக் காரணம், ராசன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன், நேற்றிரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடத்திய சந்திப்பு தானாம்.இதில் ராசன் செல்லப்பா தரப்புக்கு முதல்வர் எடப்பாடி சில உத்தரவாதங்கள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சிக்குள் சிறு, சிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.12-ந் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கருத்துக்களை கூறலாம்.அதுவரை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் வேண்டுகோள்படி அதிமுகவினர் எதுவும் பேசாமல் 'கப்சிப்' என இருப்பது நல்லது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

You'r reading உஷ்.. கப்சிப்னு இருக்கணும்- அதிமுகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கந்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்