நான் சாகப் போகிறேன்: அனுமதி கொடுங்க கலெக்டர்

Trolled after Digvijaya Singhs defeat, seer seeks go-ahead for immolation

‘நான் யாகம் வளர்த்து அதில் விழுந்து சாகப் போகிறேன், அதற்கு அனுமதி கொடுங்கள்’’ என்று கலெக்டரிடம் வந்து ஒரு சாமியார் கேட்டால் எப்படி இருக்கும்?

இந்த அனுபவம் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் கலெக்டர் தருண் குமார் பித்தோடுக்கு ஏற்பட்டிருக்கிறது. எதனால் அந்த சாமியார் அப்படி கேட்டார் தெரியுமா?

அதுவும் பாழாய்ப்போன அரசியலால்தான். மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் போட்டியிட்டார். ஏற்கனவே இந்த தொகுதியில் இரண்டு முறை தோற்றவர் அவர். இந்த முறை அவரை எதிர்த்து பெண் சாமியார் பிரக்யா தாக்குர் போட்டியிட்டார். இவர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவர். தீவிர இந்துத்துவா கொள்கையுடையவர்.

அந்த பெண் சாமியாரைப் பிடிக்காத வேறு சில சாமியார்கள், காங்கிரசின் திக்விஜய்சிங்கை ஆதரித்தனர். மேலும், பிரக்யா தாக்குர் பல சர்ச்சைகளில் சிக்கியதால் அவர் தோற்று விடுவார் என்றே கணிப்புகளும் கூறின. இந்த சூழலில், ‘‘திக்விஜய்சிங் நிச்சயம் வெற்றி பெறுவார். வெற்றியை யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து கொண்டாடுவேன். அவர் தோற்றால் அந்த யாகத்தில் குதித்து சமாதியாகி விடுவேன்’’ என்று சாமியார் வைரக்யானந்த் சூளுரைத்தார்.
இந்நிலையில், தேர்தலில் திக்விஜய்சிங் தோற்றார். அவரை 3 லட்சத்து 60 ஆயிரம்

வாக்குகள் வித்தியாசத்தில் பிரக்யா தாக்குர் வென்றார். இதையடுத்து, முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், சுவாமி வைரக்யானந்தாவை ‘எப்போது தீக்குளிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டு பா.ஜ.க.வினர் கிண்டலடித்து வந்தனர். இதனால், மனம் வெறுத்து போனார் வைரக்யானந்த் சுவாமி.

அவர் தனது வழக்கறிஞர் மூலம் மாவட்டக் கலெக்டர் தருண்குமார் பித்தோடுவிடம் இன்று(ஜூன்15) ஒரு மனு அளித்தார். அதில், ‘‘நான் ஏற்கனவே அறிவித்தபடி, யாகம் வளர்த்து அதில் குதித்து சாகப் போகிறேன். ஜூன் 16ம் தேதி மதியம் 2.11 மணிக்கு நான் சமாதியாகப் போகிறேன். எனது மதஉணர்வுகளுக்கு மதிப்பு அளித்து நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நான் சமாதியாவதற்கான நேரம், இடம் ஆகியவை குறித்து மாவட்ட நிர்வாகம் தீர்மானித்து தெரிவிக்க வேண்டும் தற்போது நான் எனது காமக்யதம் மடத்தில் வசித்து வருகிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை பெற்ற கலெக்டர் தருண் அதிர்ச்சியடைந்தார். அதன்பின்பு, அந்த மனுவை போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பி, உடனடியாக அந்த சாமியாருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

You'r reading நான் சாகப் போகிறேன்: அனுமதி கொடுங்க கலெக்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்