விஜயகாந்தின் நூறுகோடி சொத்துக்களை ஏலம் விட ஐ.ஓ.பி. வங்கி நோட்டீஸ்

I.O.B. issued announcement for e-auction of Vijayakants family college assets for rupees 100 crores

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி டிரஸ்ட் பெற்ற கடன்களை அடைக்க முடியாததால், அந்த கல்லூரி மற்றும் விஜயகாந்த் தம்பதியின் மேலும் 2 சொத்துக்களை இ-ஏலத்தில் விற்பனை செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் குடும்பத்தினர், சென்னையை அடுத்துள்ள மாமண்டூரில் ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரி நிர்வாகம், தற்போது கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஏற்கனவே பொறியியல் படித்து முடித்த பட்டதாரிகளில் பெரும்பான்மையினருக்கு வேலையே கிடைக்காமல், ரூ8 ஆயிரம், ரூ.10ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் வேலைக்கு செல்கிறார்கள். இதற்காகவா ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தோம் என்று பெற்றோரும் நொந்து போயினர்.

இதன் காரணமாக, பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களே சேராமல் மூடும் நிலைக்கு வந்துள்ளன. இதே போல், விஜயகாந்தின் கல்லூரியும் சிக்கலில் தவிக்கிறதாம். அதனால், கல்லூரிக்கு பெற்ற 5 கோடி 52 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் கடனையும், அதன் மீதான வட்டி, வட்டிக்கு வட்டி என்று எதையும் அடைக்க முடியாமல் ஏறிக் கொண்டே போயிருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளை, விஜயகாந்த் குடும்பத்தினரின் ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி சொத்தையும், ஜாமீன்தாரர்களான விஜயகாந்த், பிரேமலதா தம்பதியின் மேலும் 2 சொத்துக்களையும் சுமார் நூறு கோடிக்கு ஏலம் விட இ-ஏலம் கோரி, தினமணி நாளிதழில் இன்று விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.

இந்த விளம்பரத்தில், முதலாவதாக, காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரியின் 24 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடத்தை ஜூலை 26ம் தேதி ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் குறைந்தபட்ச கேட்பு தொகையாக 92 கோடியே 5 லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டேவணித் தொகையாக 9 கோடியே 20 லட்சத்து 50,505 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2வது சொத்தாக சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள 4651 ச.அடி நிலம் மற்றும் கட்டடம் ஏல விற்பனைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் குறைந்தபட்ச கேட்பு தொகையாக 4 கோடி 25 லட்சத்து 84,849 ரூபாயும், டேவணித் தொகையாக 42 லட்சத்து 58,485 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சொத்தாக, சாலிகிராமத்தில் உள்ள 3013 சதுர அடி நிலம் மற்றும் 10 ஆயிரம் சதுர அடி குடியிருப்புக்கு 3 கோடி 4 லட்சத்து 34,344 ரூபாய் என குறைந்தபட்ச கேட்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டேவணித் தொகையாக 30 லட்சத்து 43,435 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் தே.மு.தி.க. வட்டாரங்களிலும்,
அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading விஜயகாந்தின் நூறுகோடி சொத்துக்களை ஏலம் விட ஐ.ஓ.பி. வங்கி நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS -  கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்..! கோவையில் 17 மாணவர்கள் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்