மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு

Water crisis in TN, admk ministers participates special yagna in temples and prays for rain

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும் என மழை வேண்டி அதிமுக சார்பில் பல்வேறு கோயில்களில் யாக பூஜை நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பயபக்தியுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்கும் மக்கள் தவியாய் தவிக்கின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலைமை தான். குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று முதல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசுத் தரப்பில் தாமதமாக நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. பிரச்னையை சமாளிக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில் தண்ணீர் பிரச்னை தீர வருண பகவானும் கருணை காட்ட வேண்டி, கோயில்களில் அதிமுக சார்பில் யாக பூஜை நடத்தவும் உத்தரவு பறந்தது. மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள், முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்யும்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டனர். அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் இந்த யாக பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழத்தின் பல்வேறு கோயில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மழை வேண்டி யாகம் நடத்தினர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் மழை வேண்டியும், வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாகவேள்வி நடைபெற்றது.

கடலூரில் பாடலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மழைவேண்டி யாகம் நடைபெற்றது. இதேபோல், கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சரவண பொய்கையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதே போல் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் மழை வேண்டி யாக யூஜை நடைபெற்றது.

கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி

You'r reading மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்மிரிதி இரானி மகளை கிண்டல் செய்த மாணவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்