போனா போகட்டுமே..! நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலையிருக்காதுல்ல..! தினகரன் அசால்ட் பதில்

No problem If thanga Tamil Selvan decides to exit from ammk party, TTV Dinakaran says

ஏற்கனவே எச்சரித்து விட்டேன் .. கட்சிப் பதவி பறிக்கப்படும் என்றும் கூறி விட்டேன்.. கட்சியை விட்டு போனா சம் போகட்டும்... நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலை இல்லாமல் போனால் நல்லது தானே... என தங்க. தமிழ்ச்செல்வன் பற்றி டிடிவி தினகரன் சாதாரணமாக பதிலளித்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரனை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:

ஒரு மாதம் முன்பே ஒரு ரேடியோ எப்.எம்.மில் தங்க .தமிழ்ச்செல்வன் பேட்டி கொடுத்தது குறித்து கட்சியினர் புகார் செய்தனர். அப்போதே கூப்பிட்டு எச்சரித்தேன். மீண்டும் மீண்டும் வாய்க்கு வந்தபடி பேசியதால் கடந்த 20-ந் தேதியே அவருடைய கட்சிப் பதவியை பறிக்கப்போவதாகவும் கூறி விட்டேன். சசிகலாவை ஆலோசித்த பின் ஜூலை முதல் வாரத்தில் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துவிட்டேன்.

அதனால் தான் இப்படி போனில் அநாகரிகமாக பேசியுள்ளார். அந்தப் பேச்சு என்னுடைய உதவியாளரிடம் பேசியது இல்லை.மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரிடம் தான் அப்படி பேசியுள்ளார். விஸ்வரூபம் எடுப்பேன் என்று கூறியுள்ள தங்க. தமிழ்ச்செல்வன், என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். என்னிடம் பேசக் கூட அஞ்சுவார். வெளியில் தான் அவருடைய பில்டப் எல்லாம். மீடியாக்களும் அவருக்கு ஓவர் பில்டப் கொடுக்க,இப்போது வீணாகிப் போனார்.

அவர் ஒரு முடிவெடுத்து விட்டார் என்பது எப்போதோ தெரியும். போனால் போகட்டும் என்று தான் விட்டு விட்டோம். 20 ஆண்டு காலம் உடன் இருந்தவரை நீக்கம் என்று கூறி கட்டம் கட்ட விரும்பவில்லை. ஆனாலும் அவரை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. சசிகலாவை பார்த்து ஆலோசித்த பின் ஜூலை முதல் வாரத்தில் புதிய நிர்வாகிகளை அறிவிக்க உள்ளோம். அதில் அவர் பெயர் இருக்காது. கட்சியை விட்டு போகிறவர்கள் போகட்டும். இதனால் நீக்கம் என்ற தேவையற்ற அறிவிப்புக்கு வேலை இருக்காது போய்விடும்.

இதற்கு மேலும் தங்க .தமிழ்ச்செல்வனைப் பற்றி வீணாகப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்ற டிடிவி தினகரன், சட்டப்பேரவையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆதரவாக வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் என்று கூறப்படும் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று கேட்டதற்கு, அது ஓட்டெடுப்பின் போது தெரிய வரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்..? மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

You'r reading போனா போகட்டுமே..! நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலையிருக்காதுல்ல..! தினகரன் அசால்ட் பதில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இது டிரெய்லர்தான் மேடம்... மம்தாவை மிரட்டும் பா.ஜ.க

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்