தலைவர் பதவி வேண்டாம் ராகுல் தொடர்ந்து பிடிவாதம், அரசர் கெஞ்சல் பலிக்கவில்லை

Rahul Gandhi rejects appeals to stay on as Congress president

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த முறையும் காங்கிரஸ் 52 தொகுதிகளுடன் சுருங்கியது. இந்த படுதோல்வியை அடுத்து, தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகல் என அறிவித்தார். எனினும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பதவி விலகக் கூடாது என்று அவரை மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனாலும், அவர் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு கூறினார். மேலும், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தான் சம்பந்தப்பட மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இதனால், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யாரென்றே தெரியாமல் 20 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி கடந்த 25ம் தேதியன்று ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த 2 மாநிலங்களிலும் வரும் அக்டோபர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் முக்கியக் கூட்டணி கட்சியாக விளங்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலேயிடம்(சரத்பவார் மகள்) ராகுல்காந்தி, மகாராஷ்டிர தேர்தல் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 26ம் தேதியன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், சோனியா, ராகுல்காந்தி உள்பட அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்றனர். அப்போது திருச்சி எம்.பி.யான திருநாவுக்கரசர், ராகுலிடம், ‘‘நீங்கள்தான் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்ேபாதுதான் கட்சியினர் மீண்டும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள்’’ என்று வலியுறுத்தினார். அவர் சில நிமிடங்கள் கெஞ்சலாக பேசியும், ராகுல்காந்தி மவுனம் காத்தார். திருநாவுக்கரசரைத் தொடர்ந்து சசிதரூர், மணீஷ்திவாரி உள்ளிட்டோரும் ராகுலை தலைவர் பதவியில் நீடிக்குமாறு வற்புறுத்தினர்.

ஆனால், ராகுல்காந்தி, ‘‘எனது முடிவில் மாற்றமில்லை. நான் காங்கிரஸ் கட்சிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறேன். தலைவராக மட்டும் நீடிக்க மாட்டேன்’’ என்றார். இதற்கு சோனியாவும் எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார். இதனால், புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கையெழுத்திட மறுக்கும் ராகுல்; காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

You'r reading தலைவர் பதவி வேண்டாம் ராகுல் தொடர்ந்து பிடிவாதம், அரசர் கெஞ்சல் பலிக்கவில்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ். அணி எதிர்ப்பு; போஸ்டர்களால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்