மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சிக்கு காரணமே மம்தா தான் : காங்.குற்றச்சாட்டு

Due to mamatas failure is the reason for BJP is growing in WB: congress

மே.வங்கத்தில் தனது மோசமான கொள்கைகளால் பாஜகவை வளர விட்டு விட்டு இப்போது கூப்பாடு போடுகிறார் மம்தா பானர்ஜி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்வோம் என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா விடுத்த அழைப்பையும் இரு கட்சிகளும் நிராகரித்துள்ளன.

மே.வங்கத்தில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி ஆட்சி அரியணையில் அமர்ந்த மம்தா, கடந்த 10 வருடங்களாக தனி ராஜ்ஜியமே நடத்தினார். இந்தக் காலக்கட்டத்தில் தமது அதிரடி செயல்பாடுகளால் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் பலவீனப்படுத்தி விட்டார். வங்கத்து சிங்கமாக வலம் வந்த மம்தாவுக்கு பாஜக ரூபத்தில் சோதனை வந்து விட்டது.

மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செல்வாக்கு இழந்து காணப்பட்ட நிலையில், அந்த காலி இடத்தை நிரப்ப பாஜக திட்டமிட்டு காலடி எடுத்து வைத்தது. மத்தியில் ஆட்சி அதிகாரம் உள்ளதை வைத்து மம்தாவுடன் மல்லுக்கட்டிய பாஜக, பல்வேறு தகிடுதத்தங்களை அரங்கேற்றி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று வலுவாக காலூன்றி விட்டது.

அடுத்தபடியாக மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக குறிவைத்து விட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மம்தாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. மேலும் செல்வாக்குள்ள திரிணமுல் கட்சியின் முக்கியப் புள்ளிகளையும் பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது.அத்துடன் திரிணமுல் கட்சிக்கு எதிராக பாஜகவினர் பல இடங்களில் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் அடிதடி , வன்முறைச் சம்பவங்களால் மே.வங்கத்தில் சட்டம், ஒழுங்கும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவைக் காரணம் காட்டியே, மம்தாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவும் பாஜக நேரம் பார்த்துக் கொண்டுள்ளது.

பாஜகவின் அதிரடி களால் ஆட்டம் கண்டுள்ள மம்தா, வாருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நேற்று சட்டப்பேரவையில் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

மம்தாவின் இந்த அழைப்பை மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக நிராகரித்து விட்டது. இப்போது காங்கிரசும் மம்தாவை சரமாரியாக விமர்சித்து விட்டு, அவருடைய அழைப்பையும் நிராகரித்துள்ளது.இது குறித்து மே.வங்க எம்.பி.யும், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று கூறுகையில், மே.வங்கத்தில் பாஜக காலூன்ற காரணமே மம்தா தான்.

அவருடைய பிடிவாதமான கொள்கைகளால் தான் பாஜகவை வளர விட்டு விட்டார்.தனக்கு ஆபத்து என்றவுடன் இப்போது அலறுகிறார். ஆக மொத்தம் மம்தாவின் நிலை இப்போது ரொம்ப கவலைக்கிடமாகி விட்டது போலும். மம்தா நேரத்துக்கு ஒன்று பேசக் கூடியவர். அதனால் அவருடைய பேச்சை நம்ப முடியாது. எங்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடம் நேரடியாக பேசட்டும் என்ற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தாவின் அழைப்பை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட மறுப்பு.... ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்க

You'r reading மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சிக்கு காரணமே மம்தா தான் : காங்.குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தி.மு.க. கூட்டணியை உடைப்பதா? கராத்தேவுக்கு காங்கிரஸ் கல்தா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்