ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... சண்முகம், வில்சன் ஆகியோருக்கு அதிர்ஷ்டம்

Rajya sabha election, Dmk announces 2 mp candidates

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.பேரவையின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோருக்கு எம்.பி.யாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த அதிமுக கே.ஆர்.அர்ஜூனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்தினவேல்,இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. மக்களவைக்கு தேர்வானதால் திமுகவின் கனிமொழியும் தனது ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் தமிழகத்தில் இருந்து புதிதாக 6 ராஜ்யசபா எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும்18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையல் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் கிடைக்கும் என்பது உறுதி. இதனால் இரு கட்சிகளிலும் யார்?வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் மக்களவைத் தேர்தல் கூட்டணி உடன்பாடின் போது மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படும் என திமுக உறுதியளித்திருந்தது. இதனால் அந்த ஒரு இடத்தில் வைகோ போட்டியிட்டு ராஜ்யசபாவுக்கு செல்வது உறுதி ஆகியுள்ளது.

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்குவதாக அதிமுக உறுதி அளித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இதற்கு விடை தெரிந்துவிடும்.

ஸ்டாலின் மருமகனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி?

You'r reading ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... சண்முகம், வில்சன் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அத்திவரதரை 40 ஆண்டுக்கு பின் குளத்தில் இருந்து எடுப்பது ஏன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்