உயர்வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு

All party meeting will be conducted soon to decide about 10% reservation : Edappadi

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சியில் இருந்த போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு, அதாவது உயர்சாதியினரில் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வந்தார். தற்போது அந்த சட்டம் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, பிராமணர் உள்பட முன்னேறிய வகுப்பினருக்கும் சாதிச் சான்றிதழ் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாதிச் சான்றிதழுடன், வருமானச் சான்றும் பெற்று முன்னேறிய இனத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினர் இடஒதுக்கீடு பெறலாம்.

தற்போது கலை அறிவியல் கல்லூரிகளி்ல் இந்த ஒதுக்கீடு இல்லாமல் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையே, மருத்துவக் கல்லூரிகளில் இந்த இடஒதுக்கீடு அளிப்பதற்காக 25 சதவீத இடங்களை அதிகப்படுத்திக் கொள்ள மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று(ஜூலை2) பேசப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டார். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை விரைவில் கூட்டி விவாதித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறையே தொடர்ந்து பின்பற்றப்படும்.

இடஒதுக்கீடு விஷயத்தில் நாம் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ் ஏன்? மு.க.ஸ்டாலின் கூறிய காரணம்

You'r reading உயர்வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 48 நாள் அமைச்சர் என்று டிடிவி கிண்டல் செய்தார்... தாய் கழகத்திற்கே செல்கிறேன்..! இசக்கி சுப்பையா 'பளிச்'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்