இளைஞர் அணிக்கு தலைமை ஏற்கும் உதயநிதி

udayanithi stalin will be appointed Dmk youth wing secratary soon

திமுக இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க.வில் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என்று பல்வேறு அணிகள் இருந்தாலும், முக்கியமான அணியாக கருதப்படுவது இளைஞர் அணிதான். அதற்கு முதல் காரணம், கட்சியின் அசைக்க முடியாத தலைவராக கருணாநிதி இருந்த போது 1983ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணிக்கு அவரது மகன் மு.க.ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்டதுதான். அதே போல், தேர்தல் களத்தில் ஓடியாடி உழைப்பதும் இளைஞர்கள் என்பதால், இந்த அணிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக 34 ஆண்டுகள் பணியாற்றிய மு.க.ஸ்டாலின், கடந்த 2017ம் ஆண்டில் செயல் தலைவராக தேர்வானதும், இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்து விலகினார். அப்ேபாது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார். ஸ்டாலினுடைய மகனும் நடிகருமான உதயநிதிக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதற்காகவே அவர் விலகியதாக கூறப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உதயநிதியை இளைஞர் அணி செயலாளராக நியமிக்க தலைமையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டத்தில் தொடங்கி கட்சியின் 40 மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமைக் கழகத்திற்கு வந்து சேர்ந்தன. இதையடுத்து, கழக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி, உதயநிதி இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டா். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைமைக் கழகம் இன்று வெளியிட்டது. 

இதையடுத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெறுகிறார். அதன் பிறகு அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு பதவியேற்பார்.

தேனாம்பேட்டையில் உள்ள இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகத்துக்கு சென்று பணியை தொடங்குகிறார். தொடர்ந்து, கட்சி மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார். அன்பகத்தில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

உதயநிதிக்கு 41 வயது ஆகிறது. சென்னையில் டான் போஸ்கோ பள்ளியில் படித்து விட்டு, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றவர். 2009ல் ஆதவன் படத்தில் நடித்த அவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், ரெட்ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது வரை பகுதி நேர அரசியல்வாதியாக பணியாற்றி வந்த உதயநிதி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பேச்சாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது தந்தையின் வழியில் தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்கவிருக்கிறார்.

திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்..! உதயநிதி பேச்சால் உற்சாகமடைந்த உ.பி.க்கள்..!

You'r reading இளைஞர் அணிக்கு தலைமை ஏற்கும் உதயநிதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய அரசு பணியில் 7 லட்சம் காலியிடங்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்