அரசு அதிகாரி மீது வாளி வாளியாக சேற்றை வாரி வீசிய எம்எல்ஏ கைது

In Maharashtra congress MLA arrested for pouring buckets of mud on govt officer

மகாராஷ்டிராவில் சாலை பராமரிப்பு சரியில்லை என்று கூறி நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் மீது வாளி, வாளியாக சேற்றை வாரி வீசிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்எல்ஏ ஒருவர் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்துக்கு ஆளானது. பாஜகவின் தேசியச் செயலாளரின் மகனான அந்த எம்எல்ஏ வின் செயலுக்கு, பிரதமர் மோடியும் கண்டிப்பு காட்டியிருந்தார்.

யாருடைய மகனாக இருந்தாலும் தப்பு தப்புதான் என்று சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏவின் தந்தையை வைத்துக் கொண்டே பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் கோபமாகக் கூறிய பிரதமர் மோடி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ரீதியிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகாரி ஒருவரை பாஜக எம்எல்ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சூடு ஆறு வதற்குள், மகாராஷ்டிர மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர், ஒரு அரசு அதிகாரி மீது சேற்றை அள்ளி வீசி அசிங்கப் படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசிங்கத்தை செய்தவர் கன்காவ்லி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான நிதீஷ் ரானா என்பவர் தான். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் நாராயண ரானேவின் மகன் தான் இந்த நிதீஷ் ரானா.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இவருடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையின் பராமரிப்பு மோசமாகி குண்டும் குழியுமாக காட்சியளித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும், சகதியாக இந்தச் சாலை
காட்சியளித்துள்ளது.

மழை சேதத்தை அதிகாரிகள் சகிதம் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ நிதீஷ் ரானா | சானலயில் சேறும் சகதியாக இருப்பதைப் பார்த்து ஆவேசமானார்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலையின் பராமரிப்பு இன்ஜினியரை திட்டித்தீர்த்த எம்எல்ஏ திடீரென வாளிகளில் சேற்றை வாரி அதிகாரி மீது இறைத்தார்.எம்எல்ஏ வுடன் வந்தவர்களும் இதே போன்று சேற்றையும், குப்பை கழிவுகளையும் அந்த அதிகாரி மீது வீசியதால் அலங்கோலமாக காட்சியளித்தார்.

இந்த சேற்றை வாரியிறைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பல தரப்பிலும் கடும் கண்டனக் குரல் எழவே, இப்போது அந்த எம்எல்ஏவை போலீசார் கைது செய்துள்ளனர். எம்எல்ஏவின் செயலுக்கு அவருடைய தந்தையும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான நாராயணரானே பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

You'r reading அரசு அதிகாரி மீது வாளி வாளியாக சேற்றை வாரி வீசிய எம்எல்ஏ கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ரொம்ப' குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்... 'அளவா' குடிங்க ஒன்றும் ஆகாது...! அமைச்சர் 'அட்வைஸ்'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்