பா.ஜ.வுக்கு பெரும்பான்மை? குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது

Kumaraswamy govt loses support of another MLA, could lose majority too

கர்நாடகாவில் குமாரசாமி அமைச்சரவையில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால்,பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்றும் அறிவித்து, அமைச்சரவையில் மட்டும் கூடுதல் இடங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆனால், குமாரசாமி ஆட்சி அமைந்தது முதல் நித்ய கண்டம் பூரண ஆயுசாக குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரசில் பல எம்எல்ஏக்கள் அவ்வப்போது போர்க்கொடி தூக்க, மறுபக்கம் பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வர கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து கொண்டே போகிறது.

இந்நிலையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பலரை ராஜினாமா செய்ய வைத்து, குமாரசாமி அரசை பெரும்பான்மை இல்லாமல் ஆக்குவதற்கு எடியூரப்பா மாஸ்டர் பிளான் போட்டார். அதனால், இன்று கர்நாடக அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் 7-வதுமுறை எம்எல்ஏவாகவும் இருந்து வரும் ராமலிங்கா ரெட்டி தலைமையில், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 மஜத எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, சபாநாயகரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்.

225 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 116 ஆகவும், பாஜக பலம் 105 ஆகவும் இருந்தது. கடந்த திங்களன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் இன்றும் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் பலம், சபாநாயகருடன் சேர்த்தே 105 ஆகியுள்ளது. அதே சமயம், சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து குமாரசாமி அமைச்சரவையில் இடம்பிடித்த ஹெச்.நாகேஷ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தான் பா.ஜ.க. ஆட்சியமைத்தால் ஆதரவு தருவதாக கவர்னரிடம் கடிதம் அளித்துள்்ளார். இதனால், தற்போது காங்கிஸ்-ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையாக 106 கிடைத்து விடும். அந்த கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரும் எனத் தொிகிறது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால், கவர்னரின் ஆசியுடன் ஓரிரு நாளில் ம.ஜ.த-காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க. ஆட்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடைேய, ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி, அமைச்சர் பதவிகளை தருவதாக காங்கிரஸ் மேலிடம் உறுதியளித்து வருகிறது. இதற்காக தற்போது பதவியில் உள்ள அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதை முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார். ‘‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் இழுத்து அமைச்சர் பதவி தருவதற்காக, இப்போதுள்ள அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்’’ என்று சித்தராமையா கூறியுள்ளார்.

எனவே, கர்நாடக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குமாரசாமி ஆட்சி பிழைக்குமா அல்லது பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா என்பது ஓரிரு நாள் குழப்பத்திற்குப் பின் தெளிவாகும்.

கர்நாடக எம்எல்ஏக்கள் மும்பையில் தஞ்சம்..! பாஜக எம்.பி.யின் தனி விமானத்தில் பயணம்

You'r reading பா.ஜ.வுக்கு பெரும்பான்மை? குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுகவில் 3வது வேட்பாளர்; வைகோ அளித்த விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்