கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு இன்று முடிவு முதல்வர் குமாரசாமி ராஜினாமா?

Karnataka political crisis, cabinet meets today, CM Kumaraswamy maybe resign

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பான்மை பலம் இழந்து தவிக்கும் குமாரசாமி, வேறு வழியின்றி இன்று முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சட்டப்பேரவையை கலைக்கவும் சிபாரிசு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்-மஜத கூட்டணி அரசு பதவியேற்று 13 மாதங்களை கடந்து விட்டது.இந்தக் காலக்கட்டத்தில் காங்கிரசில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் அவ்வப்போது போர்க்கொடி தூக்கி நெருக்கடி கொடுப்பதும், பின்னர் சமாதானமாவதுமாக போக்கு காட்டியே குமாரசாமி அரசின் நிம்மதியை குலைத்து வந்தனர். மற்றொரு புறம் ஆட்சி அரியணையில் அமர்ந்துவிடத் துடிக்கும் பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பல்வேறு தகிடுதத்தங்களை செய்து ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தி வந்தார்.

இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன், குமாரசாமியின் கட்சி எம்எல்ஏக்கள் சிலரும் சேர்ந்து கொண்டு ராஜினாமா நாடகம் நடத்துவதால் ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்றே கூறலாம். பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி 14 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்து விட்டு, பாஜக தயவில் மும்பையில் சென்று பதுங்கிக் கொண்டனர்.

இதனால் ஆட்சிக்கு நெருக்கடி முற்றி விட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டியும் அதிருப்தியாளர்கள் மசியவில்லை. இந்த நிலையில் நேற்று பெங்களூருவிலும், மும்பையிலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல மணி நேரம் நட்சத்திர ஹோட்டல் முன் காத்திருந்தும் எம்எல்ஏக்களை சந்திக்க அனுமதி கிடைக்காமல், கடைசியில் அவர் கைது செய்யப்படும் நிலைக்கு சென்று விட்டது.

பெங்களூருவில், குமாரசாமி அரசு பதவி விலகக்கோரி, எடியூப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஆளுநர் வஜுபாய்வாலாவைச் சந்தித்து குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்து விட்டதால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நேற்று காங்கில் கட்சியைச் சேர்ந்த மேலும் இரு எம்எல்ஏக்களான நாக ராஜ், சுதாகர் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாதுகாப்பு கோரி ஆளுநரிடமும் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது மேலும் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் ரமேஷ்குமார் காலம் கடத்துவதும் சர்ச்சையை ஏற்படுத்த, விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்று, இன்று விசாரணைக்கும் வருகிறது.

கர்நாடக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து குமாரசாமி அரசுக்கு உச்சக்கட்ட நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இதனால் இதற்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்பது தெரிந்து விட்டது. இதனால் இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ள முதல்வர் குமாரசாமி ராஜினாமா முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டப்பேரவையைக் கலைக்குமாறு சிபாரிசு செய்வார் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று அனைவரின் கவனமும் கர்நாடக ராஜ்பவன் பக்கம் செல்லும் என்பது நிச்சயம்.

'கட்சிக்கு திரும்புங்கள்; இல்லையேல்'..? காங்.அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சித்தராமய்யா எச்சரிக்கை

You'r reading கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு இன்று முடிவு முதல்வர் குமாரசாமி ராஜினாமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போராடிய இந்திய அணிக்கு மோடி, ராகுல் பாராட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்