கல்விக்கொள்கை குறித்த கருத்து - ஆதரவு குரல் கொடுத்த கமலுக்கு நடிகர் சூர்யா நன்றி

Actor Surya thanks to MNM leader Kamal Haasan for his support on new education policy

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்குரல் கொடுத்திருந்தார். இதற்கு கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்று தெரியவில்லை.எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என, அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்தக். கருத்துக்கு, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அதில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ,மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என கமல் ஆதரவுக் குரல் கொடுத்திருந்தார்.

கமல் தமக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.தமது அகரம் பவுன்டேசன் சார்பில் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையத்திற்கும் நன்றி என சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும், திரையுலகில் என் போன்ற பலர் கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள் என கமலுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

You'r reading கல்விக்கொள்கை குறித்த கருத்து - ஆதரவு குரல் கொடுத்த கமலுக்கு நடிகர் சூர்யா நன்றி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அட்டகாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் கிரேவி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்