ஆளுநர் கெடு முடிந்தது கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு தாமதம்..! அடுத்தது என்ன?

Karnataka governor deadline ends, no trust vote in assembly, what next?

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று கூறி, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் இன்றைக்குள் வாக்கெடுப்பு நடைபெறுமா? ஆளுநர் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் நிலைமை ஊசலாடுகிறது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி கெத்தாக அறிவித்தார். இதனால் வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டு நேற்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் குமாரசாமி .

ஆனால் பேரவையில், தமக்கு ஆதரவாக மெஜாரிட்டி உறுப்பின்கள் இல்லை என்று தெரிந்து கொண்ட முதல்வர் . குமாரசாமி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு தயாராகாமல், விவாதம் என்ற பெயரில் நேரம் கடத்தினார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி, அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இல்லையா? என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா, முக்கிய பிரச்சனையை எழுப்பினார். இதனால் ஆவேசமடைந்த பாஜகவினர் அமளியில் ஈடுபடநேற்று 3 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் பாஜகவினர் ஆளுநடரிடம் முறையிட, நேற்று இரவுக்குள் வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநரும் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் பேரவை கூடிய சில நிமிடங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படாமலே சபையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள், இரவு முழுவதும் அங்கேயே தூங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்தார். ஆனால் இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடனே, ஆளுநரின் கெடுவை நிராகரித்த சபாநாயகர், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

மேலும் வாக்கெடுப்புக்கு முன் நம்பிக்கை தீர்மானத்தின் மீது உரிய விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறி, முதல்வர் குமாரசாமியை பேச அனுமதித்தார். பாஜக தரப்பிலோ, விவாதத்தில் பங்கேற்க மாட்டோம். உடனடியாக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினாலும், ஆளும் தரப்பில் பலரும் விவாதத்தில் பங்கேற்க, ஆளுநர் விதித்த 1.30 மணி கடந்தது .தொடர்ந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்காக சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ஆளுநர் விதித்த கெடு முடிந்தும் வாக்கெடுப்பு நடத்தப்படாததால் பாஜக தரப்பில் மீண்டும் ஆளுநரிடம் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஆளும் கட்சித் தரப்பில் உச்சதீதிமன்றத்திலும், கொறடா உத்தரவு தொடர்பான தீர்ப்பில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தக்கோரி முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் திங்கட்கிழமை வரை தாமதப்படுத்த ஆளும் தரப்பு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இடைப்பட்ட 2 நாட்களில் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்து விடலாம் எனக் கருதுவதே, நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆளுநர் விதித்த கெடுவையும், முதல்வரும், சபாநாயகரும் அலட்சியம் செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுநரும் ஏதேனும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி, கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதம்; திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு

You'r reading ஆளுநர் கெடு முடிந்தது கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு தாமதம்..! அடுத்தது என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரியங்கா காந்தி திடீர் தர்ணா; கைது செய்த உ.பி. போலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்