பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்காமல் திரும்ப மாட்டேன்: பிரியங்கா காந்தி மீண்டும் தர்ணா

Yogi govt hiding failure, says Congress as Priyanka Gandhi continues protest

உத்தரப்பிரதேசத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்ப மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட கூறியிருக்கிறார். உ.பி.யிேலயே நேற்றிரவு தங்கிய அவர், இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் சோன்பத்ரா பகுதியில் அம்பா என்ற ஊரில் நிலப் பிரச்னையால் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது துப்பாக்கியால் மாறி, மாறி சுட்டனர். இதில் 10 பேர் வரை உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவம் தொடர்பாக 24 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று(ஜூலை 19) காலையில் திடீரென சோன்பத்ராவுக்கு சென்றார். அவர் நாராயண்பூர் அருகே சென்ற போது அவரை போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சேர்ந்து தடுத்தனர். அப்போது அவர், ‘‘யாருடைய உத்தரவின் பேரில் என்னை தடுக்கிறீர்கள்? எந்த சட்டத்தில் என்னை போக விடாமல் தடுக்கிறீர்கள். நான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே செல்கிறேன்.

எனது மகன் வயதில் ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் கிடப்பதைப் பார்த்தேன். நான் ஏன் அங்கு போகக் கூடாது?’’என்று பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்தார்.

தொடர்ந்து அவர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா செய்தார். அப்போது நாராயண்பூர் போலீசார் அங்கு வந்து அவரை எழுப்பி காரில் அழைத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி, ‘‘என்னை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் எங்கும் செல்லத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.

இதன்பின்னர், பிரியங்கா காந்தியை வாரணாசிக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள சுனார் என்ற ஊருக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். அதன்பின், அவரை டெல்லிக்கு திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த பிரியங்கா காந்தி, நேற்றிரவு அந்த விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இதன்பின், இன்று காலையில் அவர் சுனாரில் முக்கிய சாலைக்கு வந்தமர்ந்து தர்ணா செய்யத் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் அமர்ந்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே, பிரியங்கா காந்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் சோன்பத்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்திருக்கிறேன். அவர்களை சந்திக்காமல் இங்கிருந்து திரும்பிச் செல்ல மாட்டேன். உ.பி.யில் உள்ள பாஜக அரசு, நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக ஏழை மக்களை ஒடுக்குகிறது.

ஏழைகளுக்கு எதிரான அரசாக யோகி ஆதித்யநாத் அரசு உள்ளது’’ என்றார்.
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது உ.பி.யில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடப்பதால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ட்விட்டரில் பிரியங்கா காந்தி வெளியிட்ட திருமண படம்

You'r reading பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்காமல் திரும்ப மாட்டேன்: பிரியங்கா காந்தி மீண்டும் தர்ணா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அத்திவரதர் தரிசனம் காண முதியோர்கள் வர வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்