திரிணாமுல் காங். எம்.பி.க்கு சம்மன் அனுப்பியது சி.பி.ஐ எப்போது தெரியுமா?

CBI summons Derek OBrien in connection with TMC mouthpiece funding

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பத்திரிகைக்கு நிதி வந்தது தொடர்பாக விசாரிக்க, அந்த கட்சியின் மூத்த எம்.பி. டெரிக் ஓ பிரையனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. எப்போது தெரியுமா? அதை அவரே ட்வீட் செய்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பும் கடுமையாக விமர்சிப்பவர் மம்தா பானர்ஜி.
இதனால், அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும், முக்கிய நிர்வாகிகளையும் பாஜக தன்பக்கம் இழுத்து வருகிறது. ‘‘எங்களுடன் மம்தா கட்சியின் 105 எம்எல்ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள், எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சியை கவிழ்ப்போம்’’ என்று வெளிப்படையாக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனாலும், மத்திய பாஜக அரசை மம்தா கடுமையாக எதிர்த்து வருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்ெகாண்டு, அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. மாநிலங்களவையில் அந்த மசோதாவை எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ், அதை பொறுப்புக் குழுவுக்கு அனுப்பக் கோரி தீர்மானம் கொண்டு வந்தது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றியடைந்தால் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேறாமல் போய் விடும். இதையடுத்து, பிரதமர் மோடியே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் ஆதரவு கேட்டிருக்கிறார். தேஜ கூட்டணி மற்றும் டிஆர்எஸ், பிஜேடி கட்சிகளின் ஆதரவில் திரிணாமுல் தீர்மானம் தோற்றது.

இந்நிலையில், திரிணாமுல் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன் நேற்றிரவு வெளியிட்ட ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:

திரிணாமுல் கட்சியின் பத்திரிகை ஜகோ பங்கலா. இதன் வெளியீட்டாளர் டெரிக் ஓ பிரையன். ஆசிரியர் சுப்ரதா பக்‌ஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சில விளக்கங்களை பெறுவதற்காக ஆசிரியர் சுப்ரதா பக்‌ஷியை சிபிஐ அழைத்து விசாரித்தது. இப்போது வெளியீட்டாளரை அழைத்திருக்கிறது. சி.பி.ஐ. சம்மன் ெகாடுத்த நேரம் ஜூலை 25ம் தேதி பிற்பகல் 2 மணி. மாநிலங்களவையில் ஆர்டிஐ சட்டத்திருத்தத்தை எதிர்த்து திரிணாமுல் கொடுத்த தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கிய நேரம் ஜூலை 25ம் தேதி பிற்பகல் 2 மணி.

இவ்வாறு ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார் டெரிக் ஓ பிரையன்.
ஜகோ பங்கலா பத்திரிகைக்கு மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் விற்றப் பணம் நன்கொடையாக தரப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பணம் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடியில் தொடர்புடைய பணம் என்று சிபிஐ சந்தேகப்படுகிறது. அது தொடர்பாக, விசாரிக்கவே சம்மன் அனுப்பியிருக்கிறது. ரோஸ்வேலி சிட்பண்ட்டில் சுமார் 17 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க.வுடன் தொடர்பு; மம்தா திடீர் எச்சரிக்கை

You'r reading திரிணாமுல் காங். எம்.பி.க்கு சம்மன் அனுப்பியது சி.பி.ஐ எப்போது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'உயர உயர பறக்க கனவு காணுங்கள்; கனவை நினைவாக்குங்கள்' பன்முக நாயகன் அப்துல் கலாமின் தாரக மந்திரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்