முத்தலாக் மசோதா: அதிமுக ஆதரித்ததா?எதிர்த்ததா? என்பது விடுகதை ப.சிதம்பரம் கிண்டல்

thalaq bill, P.chidambaram on twitter questions weather admk supported or opposed in Rajya sabha

முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் அதிமுகவினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா என்பது விடுகதை ஆக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.இந்த மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மக்களவையும் ஒரு மாதிரியும், மாநிலங்களவையில் வேறொன்றுமாக இருந்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது. மக்களவையில், அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ரவீந்திரநாத் குமார் இம்மசோதாவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதுடன் ஆதரவாக ஓட்டும் போட்டார்.

மாநிலங்களவையிலோ இதற்கு நேர்மாறாக அதிமுக எம்பிக்கள் மசோதாவை எதிர்த்து காரசாரமாக பேசினார்கள். ஆனால் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து விட்டனர். இதனால் மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறி, அடுத்து சட்டமாகவும் வழிவகுத்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மாநிலங்களவையில் மெஜாரிட்டி பலம் கிடையாது. மேலும் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், டிஆர் எஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் எதிர்த்தால் இம்மசோதா நிறைவேறுவது சந்தேகம் தான் என்ற நிலையே இருந்தது. ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாம் மசோதாவை எதிர்ப்பதாகப் பேசிவிட்டு, கடைசியில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன. இது ஒரு வகையில் மத்திய அரசுக்கு சாதகமாகி மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்தது போலவே ஆகிவிட்டது. அதிமுகவின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழகத்தில் உள்ள பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களையும் முன்வைத்தன.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில்,
முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள். மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை! என ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

You'r reading முத்தலாக் மசோதா: அதிமுக ஆதரித்ததா?எதிர்த்ததா? என்பது விடுகதை ப.சிதம்பரம் கிண்டல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்க ஸ்டைலுக்கு எந்த லேப்டாப் பொருந்தும் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்