அவர் மகாராஜா பேத்தி அல்ல ஹூரியத் தலைவரின் மனைவி

hurriyat Leaders Wife Shown as maharaja hari Singhs Granddaughter in Video on Article 370 Repeal

காஷ்மீர் மகாராஜாவின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவியது. ஆனால், அது மகாராஜாவின் பேத்தி அல்ல என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் தொடர்பாக சில போலி செய்திகளும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காஷ்மீரின் கடைசி மகாராஜா ஹரிசிங்கின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோவும் அப்படி வைரலாக பரவியது. உண்மையில் அந்த பெண் மகாராஜாவின் பேத்தியே அல்ல. அவர் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பின் தலைவர் ஒருவரின் மனைவி என்று தெரிய வந்துள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதற்கு முன்பு, தனி நாடாக இருந்தது. டோக்ரா சீக்கியரான ஹரிசிங் என்பவர் மகாராஜாவாக இருந்தார். இவரது மகன் கரண்சிங், காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர். இவரது மகள் ஜியோத்ஸனா சிங்.
இந்நிலையில், ஹூரியத் தலைவர் நயீம் அகமத்கானுடைய மனைவியான பேராசிரியர் ஹமீதா நயீம், காஷ்மீர் வரலாற்றைப் பற்றி பேசும் வீடியோதான், சமூக ஊடகங்களில் மகாராஜாவின் பேத்தி என்ற பெயரில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஹமீதா, காஷ்மீர் தனி நாடாக இருந்து இந்தியாவில் சேர்ந்த போது எப்படி மகாராஜா ஒப்பந்தம் போட்டார் என்பதை விளக்குகிறார்.

‘‘எல்லோரும், 370வது பிரிவின் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு சலுகையை இந்தியா அளித்ததாக கூறுகிறீர்கள். உண்மையில் எங்கள் மகாராஜா, காஷ்மீரை இணைத்த போது உங்கள் சட்டங்களில் சிலவற்றை எங்கள் நாட்டில் அமல்படுத்துவதாக விட்டு கொடுத்தார். அதாவது, நாங்கள்தான் எங்கள் நாட்டுக்குள் உங்களுக்கு சில சலுகைகளை அளித்திருக்கிறோம். நீங்கள் ஒன்றும் எங்களுக்காக எதையும் விட்டுத் தரவில்லை’’ என்று ஹமீதா ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், மகாராஜாவின் பேத்தி உரிமையாக பேசுவதில் நியாயம் இருக்கிறது என்று முதலில் நினைப்பார்கள். ஆனால், அவர் மகாராஜாவின் பேத்தி அல்ல என்று தெரிந்தவுடன், தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
ஹமீதா நயீம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் வரலாறு பற்றி உரையாற்றினார். அந்்த வீடியோவைத் தான் சிலர், மகாராஜாவின் பேத்தி என்று திரித்து போட்டு சமூக
ஊடகங்களில் பரப்பி விட்டார்கள்.

இதைப் பார்த்த மகாராஜாவின் பேரன் விக்ராமாதித்யா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹமீதா பேசும் வீடியோவை எடுத்து போட்டு, ‘‘அது என் சகோதரி ஜியோத்ஸனா சிங் அல்ல. பொய்யான தகவல்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். 

You'r reading அவர் மகாராஜா பேத்தி அல்ல ஹூரியத் தலைவரின் மனைவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்..? வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்