ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை

Pranab, manmohan Sonia, Rahul pay homage to former PM Rajiv Gandhi on his 75th birth anniversary

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1944, ஆகஸ்ட் 20-ந் தேதி, இந்திரா காந்தி- பெரோஷ் காந்தி தம்பதியின் மூத்த மகனாக பிறந்தவர் ராஜீவ் காந்தி. மிகப் பெரும் அரசியல் குடும்பத்தில் பிறந்த ராஜீவ் காந்தி, தனது தாத்தா நேரு, தாயார் இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர் பதவி வகித்த போதும் அரசியலில் ஆர்வமின்றே வளர்ந்தார். கல்லூரிப் படிப்பை லண்டனில் முடித்த ராஜீவ் காந்தி தான் விரும்பியபடி விமான பைலட்டாக பணியாற்றினார். தன்னுடன் படித்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை காதலித்து கரம் பிடித்த ராஜீவ் காந்தி, பைலட்டாக பணிபுரிந்து வந்தார்.

அரசியலில் தீவிரமாக இருந்த ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய் காந்தி இளம் வயதிலேயே விமான சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் உயிரிழந்தார். இதனால் காலச் சக்கரம் சுழன்றடித்து, ராஜீவ் காந்தி அரசியல் வாழ்க்கையில் காலடி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சஞ்சய் காந்தியின் அமேதி தொகுதியில் 1981-ல் எம்.பி.யானார் ராஜீவ் காந்தி. அடுத்த மூன்றே வருடங்களில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். இதனால் 40 வயதில் நாட்டின் இளம் பிரதமர் பதவியிலும் அமர்ந்தார்.

பிரதமராக இருந்த காலத்தில் தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து சபாஷ் பெற்றார். கம்ப்யூட்டர் நவீனங்களை இந்தியாவில் புகுத்தி கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்தினார்.இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக காரணமாக இருந்தார். ஆனால் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்காததால், அவர்களின் பகைமையை சம்பாதித்தார்.

இவரது பதவிக் காலத்தில் திடீரென முளைத்த போபர்ஸ் விவகாரம் சுற்றிச் சுழன்றடிக்க, அடுத்து வந்த 1989 தேர்தலில் தோல்வி கண்டு பிரதமர் பதவி இழந்தார் ராஜீவ் காந்தி. தோல்வியால் துவண்டுவிடாமல் காங்கிரசை மீண்டும் எழுச்சி பெற ராஜீவ்காந்தி கடுமையாக உழைத்தார். இதன் காரணமாக 1991 பொதுத் தேர்தலில் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது I ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, 1991 மே 21-ந் தேதி மனித வெடிகுண்டுக்கு பலியான சோகம் அரங்கேறியது. 47 வயதிலேயே இளம் தலைவர் ஒருவரை இழந்த இந்தியா துக்கத்தில் கதறியழுதது என்றால் மிகையாகாது.

இந்நிலையில் இன்று ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் விழாவை காங்கிரசார் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங். தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளை நினைவு கூர்ந்து ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறந்த தேசப்பற்றாளராக, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ராஜீவ் காந்தியின் கொள்கைகள், இந்தியாவை வலுவாக்க காரணமாக இருந்தது. ஒரு அன்பான தந்தையாக, யாரிடமும் வெறுப்பு காட்டாமல், விட்டுக் கொடுக்கும் பண்பையும், அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவர் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு

You'r reading ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் நினைவிடத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மலர் தூவி மரியாதை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்