அன்று உள்துறை அமைச்சர் பி.சி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா

When Amithsha was arrested in fake encounter case, P.Chidambaram was Home minister

கடந்த 2010ம் ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ.யால் அமித்ஷா கைது செய்யப்பட்ட போது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

இப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் வேளையில் அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பீட்டர் முகர்ஜி, அவரது 2வது மனைவி இந்திராணி முகர்ஜி சேர்ந்து நடத்திய ஐ.என்.எக்ஸ். நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டில் பங்குகளை விற்பதன் மூலம் வெளிநாட்டில் முதலீடு திரட்டுவதற்கு முடிவு செய்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) இந்த கம்பெனிக்கு அதன் பங்குகளின் முகமதிப்பைக் கொண்டு ரூ.4.62 கோடி திரட்ட அனுமதியளித்தது.
அப்போது இந்த கம்பெனிக்கு மொரிசியஸ் நாட்டில் உள்ள 3 கம்பெனிகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு வருகிறது. வெறும் ரூ.4.62 கோடிக்கு அனுமதி பெற்று விட்டு, ரூ.305 கோடியை உள்ளே கொண்டு வந்தது இந்த கம்பெனி.

இந்த முறைகேட்டை சரி செய்ய லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவியதாக கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ ஒரு ஊழல் வழக்கும், அமலாக்கத் துறையினர் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், தான் அப்ரூவராக விரும்புவதாக இந்திராணி தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை 11ம் தேதி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20ம் தேதி நிராகரித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு சிதம்பரம் இல்லாததால், அவர் 2 மணி நேரத்திற்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று ஒரு நோட்டீஸை ஒட்டி விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக உள்ளனர்.

சி.பி.ஐ. தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா பொறுப்பு வகிக்கும் உள்துறையின் கீழ் இயங்குகிறது. இந்த நேரத்தில், கடந்்த 2010ம் ஆண்டு நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்த ஆண்டில் ஜூலை 25ம் தேதி, சி.பி.ஐ. அதிகாரிகளால் போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார்.

அது என்ன போலி என்கவுன்டர் வழக்கு? 2005ம் ஆண்டில் சொரபுதீன் அன்வர் உசைன் என்பவர் தீவிரவாதி என்று அடையாளம் காணப்பட்டு, குஜராத் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவரை அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா சொல்லி, வேண்டுமென்றே சுட்டு கொன்றார்கள் குஜராத் போலீசார் என்பதுதான் போலி என்கவுன்டர் வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டு.

சொராபுதீன் யார்? ராஜஸ்தான் மாநிலத்தில் மார்பிள் வியாபாரம் செய்து வந்த ராமன் படேல், தசரத் படேல் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வந்த ஒரு தாதா சொராபுதீன். இந்த ஆளால் தாங்கள் படும் துன்பத்தை வியாபாரிகள், குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சொல்கின்றனர். அமித்ஷா உத்தரவின்படி குஜராத் போலீஸ் அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டு, போலி என்கவுன்டரில் சொராபுதீனை கொன்றார்கள் என்பதுதான் சி.பி.ஐ. குற்றச்சாட்டு.

இதே போல், இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கும் அமித்ஷா மீது போடப்பட்டது. அந்த தருணத்தில், அமித்ஷாவின் அமைச்சர் பதவி பறிபோனது. அவர் குஜராத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டது. கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இப்போது அந்த அமித்ஷா, டெல்லி அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராகி, மோடியை பிரதமராக்கி, மீண்டும் ஒரு தேர்தலில் தனது சாணக்கியத்தனத்தால் காங்கிரசை தவிடுபொடியாக்கி விட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். அது அரசியலிலும் ஒரு வட்டம்தான். மேலே இருப்பவர் கீழே வரலாம். கீழே இருப்பவர் மேலே வரலாம்.

You'r reading அன்று உள்துறை அமைச்சர் பி.சி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்