எடப்பாடி சொல்வது அப்பட்டமான பொய்... ஸ்டாலின் குற்றச்சாட்டு

Edappadi speaks lie in usa, about 5 lakh investments : m.k.stalin

தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். அது அப்பட்டமான பொய் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:

முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு போயிருக்கிறார். முதலீட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதாக அறிவித்து விட்டுப் போயிருக்கிறார். நியாயமாக, ஒரு முதலமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனியாக சென்றிருந்தால் மக்கள் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் மட்டுமா போயிருக்கிறார்? சம்பந்தப்பட்ட அமைச்சர் கூட செல்லலாம். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அமைச்சரவையே சென்றிருக்கிறது. மொத்தம் 10 அமைச்சர்கள் போய் விட்டார்கள். அடுத்து 8 அமைச்சர்கள் போகப் போகிறார்கள். அதனால்தான், இது அ.தி.மு.க அமைச்சரவை அல்ல; அ.தி.மு.க.வின் சுற்றுலா அமைச்சரவை என்று கூறி. ஒரு படத்தையும் கொடுத்தேன்.

பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வந்திருக்கின்றது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. 2780 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கின்றோம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், என்று ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள் என்று அரசு செய்தியினை வெளியிடுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் முதலமைச்சர் பேசிய பேச்சும் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றது.

என்ன பேசி இருக்கின்றார் என்றால், 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தினோம். அதில் ஏறக்குறைய 5 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை பெற்றோம். அந்த முதலீட்டை பெற்ற காரணத்தினால் 220 தொழில்நிறுவனங்கள் பணியைத் துவங்கி விட்டது என்று ஒரு செய்தியினைச் சொல்லியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான பொய். , அப்படி 220 தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டதா? எந்த நிறுவனம்? எந்த ஊரில்? எங்கு துவங்கப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கையாக வையுங்கள் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் தொடர்ந்து பேசிவருகிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள்.

அப்போது 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு அறிவித்தார்கள். 2வது உலக முதலீட்டாளர் மாநாடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்றபோது நடத்தினார். அதில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய். எனவே, கிட்டதட்ட 5 லட்சம் கோடி என்று அறிவித்திருக்கின்றார்கள். இந்த 5 லட்சத்திற்கு போட்ட ஒப்பந்தளுக்கே முதலீடு வந்த வழியைக் காணோம். இப்போது அமெரிக்காவிற்கு சென்று இப்படி 2780 கோடிரூபாய்க்கு முதலீட்டை பெற்றிருக்கின்றோம் என்று பேசியிருக்கின்றார். முதலீடு வந்தால் மகிழ்ச்சிதான்! அதனை பாராட்டுகிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

You'r reading எடப்பாடி சொல்வது அப்பட்டமான பொய்... ஸ்டாலின் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக மீண்டும் வென்றால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் : மு.க.ஸ்டாலின் பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்