புகழேந்தி வீடியோ விவகாரம்.. விசாரித்த பின்பு நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

bangalore pugazhendi video issue will be enquired and i will take action : TTV

‘புகழேந்தி பேசியதை நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்’’ என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சட்டப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தினகரன், அதிமுகவுக்கு உரிமை கோருவதை விட்டுவிட்டு, ‘அ.ம.மு.க.’ என்ற புதிய கட்சியைத் துவக்கினார். இந்த கட்சி போனியாகுமா, அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தி.மு.க.வுக்கும், இசக்கி சுப்பையா, அதிமுகவுக்கும் தாவினர்.
இவர்களைத் தவிர, வெற்றிவேல், பழனியப்பன், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் மட்டுமே முக்கிய தளகர்த்தாக்களாக தினகரன் பின்னால் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பெரும் தோல்வியைச் சந்திக்கவே இவர்களும் மாற்றி யோசிப்பதாக கூறப்படுகிறது. .

இந்த சூழலில் கடந்த வாரம் புகழேந்தி, கோவைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அறையை காலி செய்வதற்கு பெட்டிகளை ரெடி செய்த போது, அவரை சந்திக்க அமமுக கட்சியினர் ஐந்தாறு பேர் வருகிறார்கள். அவர்களுடன் புகழேந்தி பேசும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு பெண், தன்னை இணைச் செயலாளர் என்று சொல்கிறார். அப்போது ஒருவர், ‘‘உங்க கிட்ட ஐந்து நிமிஷம் பேசிவிட்டு போகத்தான் வந்தோம். நாங்க கட்சிக்காக உழைக்கறதுக்கு தயாராக இருக்கிறோம்...’’ என்று பேசுகிறார்.

அப்போது குறுக்கிட்ட புகழேந்தி, ‘‘தப்பா எதுவும் நினைக்காதீங்க. போகுற இடத்துலயும் இருக்கிற இடத்துலயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இருக்கக் கூடாது. நமக்கான சரியான பொசிஷனையும், ஃப்யூச்சரையும் சரி பண்ணிட்டுதான் போகணும். அந்த ஐடியாவோடதான் இருக்கிறேன். என்னோட லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துகிறேன். இங்கயும்(அமமுக) எனக்கு யார் கிட்டயும் போய் நிக்க நேரம் இல்ல...

அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரனை ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான். போராட்டம் எல்லாம் பண்ணி கொண்டு வந்தோம். உண்மையைச் சொல்லணும்னா அம்மா சாகறப்பக் கூட அவரு கிடையாது. அதனாலதான் சொல்றேன். யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வருவோம். நான் அப்பறம் உங்ககிட்ட பேசுகிறேன்’’ என்று அவர்களுக்கு புகழேந்தி ஆறுதல் கூறுவதாக முடிகிறது அந்த வீடியோ.

இந்த வீடியோ வெளியானதும் புகழேந்தி, ‘‘கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், முழு வீடியோவை வெளியிட வேண்டும், அதனைப் பார்த்தால் உண்மை என்னவென்று புரியும்’’ என்று தெரிவித்தார்
இந்நிலையில், திருச்சியில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் நிருபர்கள் அவரிடம் புகழேந்தி விவகாரம் குறித்து கேட்டனர் அதற்கு அவர், ‘‘புகழேந்தி பேசியதை நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை.

எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். உண்மையாக நடந்தது என்னவென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை பற்றி முன்கூட்டியே தீர விசாரித்து அதன் பிறகே அந்த முடிவு எடுக்கப்பட்டது. அமமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்வது அவரவர் விருப்பம், அதை துரோகம் என்று சொல்லமாட்டேன்’’ என்றார்.

You'r reading புகழேந்தி வீடியோ விவகாரம்.. விசாரித்த பின்பு நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தலைமை நீதிபதி மாற்றத்திற்கு எதிர்ப்பு : ஒரு லட்சம் வக்கீல்கள் போராட்டம்.. ஜனாதிபதியிடம் மனு அளிக்க முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்