பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

SC dismisses Vaikos plea challenging detention of Farooq Abdullah

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மதிமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதியன்று அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாடு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அதில் பரூக் அப்துல்லாவும் ஒருவர்.

அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், அவர், காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்்தது. அப்போது காஷ்மீர் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பரூக் அப்துல்லா தற்போது காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், வைகோவின் வழக்கறிஞரிடம், பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைத்துள்ளதால், அதை எதிர்த்து அதற்கான நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்பின், வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

You'r reading பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை.. பிரதமரின் பேச்சால் மாணவர்கள் நெகிழ்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்