ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..

M.K.Stalin says Admk government got ISI in corruption

ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி என்று நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாங்குநேரியில் அவர் நேற்று(அக்.15) பிரச்சாரம் செய்த போது பேசியதாவது:
இந்த தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்த போது, தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகப் பேசியுள்ளார். அதுவும், ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட ஆட்சியாம். அதைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

அவர்கள் ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள்; லஞ்சம் வாங்குவதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள்; கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள்; அடிமையாக இருப்பதில் ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கியிருக்கிறார்கள்; எடுபிடியாக இருப்பதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார்கள்!

பொள்ளாச்சியில் 250 இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு. அப்படி, பாலியல் பலாத்கார வழக்கு பட்டியலை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் ஐ.எஸ்.ஐ.முத்திரை வாங்கியிருக்கிறார்கள்!

எடப்பாடி பழனிசாமியே ஊழல் வழக்கில் சிக்கி ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கியிருக்கிறார். முதலமைச்சர் மட்டுமல்ல, வேலுமணியாக இருந்தாலும், தங்கமணியாக இருந்தாலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எல்லோரும் இன்றைக்கு கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் கூடாரமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.

நான் தி.மு.க.ஆட்சியில் ஜப்பான் நாட்டிற்குச் சென்றேன், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு, அந்த நாட்டு வங்கி அதிகாரிகளோடு கலந்துபேசி, தேவைப்படக்கூடிய நிதியைப் பெற்று வந்தேன். இன்றைக்கு, சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நிதி பெறுவதற்காகச் சென்றேனே தவிர வேறல்ல. சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, மேயர்கள் மாநாடு அமெரிக்காவில் நடந்தது. அதற்கு என்னை அனுப்பிவைத்தார்கள், அந்த மாநாட்டிற்கு நான் சென்றேன். நான், அரசுப் பதவியில் இருந்தபோது அரசு நிதியில் சுற்றுலா செல்லவில்லை.

இப்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடியோ மற்றும் அமைச்சர்களோ தனிப்பட்ட முறையில் வெளிநாடு போயிருந்தால், அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். முதலீட்டைப் பெறப் போகிறோம் என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறீர்கள். அந்தச் சுற்றுப்பயணத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்லவேண்டாமா ?
நீங்கள் இந்த மாநிலத்திற்கு முதலீடு பெறுவதற்குச் சென்றீர்களா, கொள்ளையடித்ததை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்குச் சென்றீர்களா ? என்றுதானே நாங்கள் கேட்கிறோம். இதைக் கேட்டால் எடப்பாடி, ஸ்டாலினுக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று பேசுகிறார்.

சுவிஸ் வங்கியில் எனக்குப் பணம் இருக்கிறது என்று வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். 8 வருடமாக நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள் - போதாக்குறைக்கு மத்திய அரசின் துணை உங்களுக்கு இருக்கிறது.

எனக்கு அந்த வங்கியில் பணமிருந்தால், அதைக் கண்டுபிடித்து வெளியில் சொல்லுங்களேன்! அதனை, ஆதாரத்தோடு நிரூபியுங்கள். அதனை நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். ஆனால், நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் ஊரைவிட்டு ஓடுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்