துரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி

we will not join with traitors in admk, says TTV Dinakaran

துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரையில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வுக்குத்தான் வருவார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, டி.டி.வி.தினகரன் பதிலளிக்கையில், யார், யாரோ உளறுவதற்கு எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.

அவர் பேசுவதை எல்லாம் கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது தவறு. மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது. ஒரு பிரதமராக இருந்தவரின் படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது.

எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை நாளை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்கம் போல் இதற்கு எதிராகவும் மனு செய்துள்ளனர். இதை முறியடித்து எங்கள் கட்சிக்கு தனிச் சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்.

ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டால், குழப்பம் வரும் என்பதால் போட்டியிடவில்லை. ஒரே சின்னம் பெற்று அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading துரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்