நதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு

Dmk asks tamilnadu government to file appeal petition in karnataka dam case

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வௌயிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு 5 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும், உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் அதிமுக அரசு தோற்று இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையிலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகும் எந்த வழக்குகளிலும் தமிழக அரசோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ எந்த கவனமும் செலுத்துவதில்லை. தொடர்புடைய வழக்கறிஞர்களை சந்தித்து அவர்களுடன் வழக்கு தொடர்பாக விவாதிப்பதும் இல்லை.

இதன் விளைவாக, தமிழகம் தனது ஜீவாதார உரிமைகளை பல வழிகளில் இழந்திருக்கிறது. குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையாக வாதிடாமல் கோட்டை விட்டது. அதனால், வலுவான வாரியத்திற்கு பதில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு பல் இல்லாத மேலாண்மை ஆணையம் அதுவும் மேற்பார்வை செய்யும் குழு போல் கிடைத்தது. அதே போல், இப்போது பெண்ணையாறு விவகாரத்திலும் உரிய முறையில் தமிழக அரசு வாதத்தை எடுத்து வைக்காமல் தமிழகத்தின் நதிநீர் உரிமையை தாரை வார்த்து இருக்கிறது.

தமிழக மக்களின் உயிர் நாடி பிரச்சினையான - நதிநீர் தொடர்பான வழக்குகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டாமல் இருப்பதும், குறைந்தபட்சம் அந்த துறை அமைச்சர் என்ற அடிப்படையில் வழக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.

நதிநீர் பங்கீட்டு உரிமைகள் என்பது இந்த அரசுக்கு முன்னுரிமை இல்லை. இந்த அரசின் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் வேறு பங்கீட்டில்' தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆகவே, உடனடியாக முதலமைச்சர் நேரடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டி, ஐந்து மாவட்ட மக்களுக்கான பாதிப்பை நீக்கவும், கர்நாடக பாசன திட்டங்களை தடுத்து நிறுத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு துரைமுருகன் கூறியிருக்கிறார்.

You'r reading நதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்க பள்ளியில் பயங்கரம்.. 2 பேரை சுட்டு கொன்ற மாணவன்.. தற்கொலைக்கு முயற்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்