அமலாக்கத்துறை விசாரணை, அமைச்சருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்

Agitation against kerala minister jaleel

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீல்பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.


கேரள உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் ஜலீல். இவர் மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதாரகத்துடன் தொடர்பு வைத்து நன்கொடைகளை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தூதரகத்தின் பார்சலில் துபாயிலிருந்து புனித குரான் நூல்களை இறக்குமதி செய்தார். இந்த குரான் நூல்கள் வந்த பார்சலில் தங்கமும், வெளிநாட்டுப் பணமும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய அமலாக்கத் துறை கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கும்பலுடனும் அமைச்சர் ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகின.


இதையடுத்து அமைச்சர் ஜலீல் பதவி விலக வேண்டும் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமைச்சரை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பும், அமைச்சர் ஜலீலின் வீட்டின் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இதற்கிடையே நேற்று மாலை அமைச்சர் ஜலீல் மலப்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காரில் புறப்பட்டார். அவர் சென்ற வழி முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்தும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இன்றும் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், தான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அமைச்சர் ஜலீல் கூறியுள்ளார்.

You'r reading அமலாக்கத்துறை விசாரணை, அமைச்சருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட்தேர்வு ரத்து பிரச்னை.. அதிமுக நடத்தும் நாடகம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்