ரஜினி, கமலுக்கு பாடம்.. இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது.. சீமான் பேட்டி..

ரஜினிக்கும், கமலுக்கும் புகட்டுவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, அப்போது நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அவதூறாகப் பேசியதாகவும், போலீஸ் அனுமதியின்றி பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைக்காகச் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சீமான் நேற்று(டிச.23) ஆஜரானார். வழக்கு விசாரணை ஜனவரி 5-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களை யாரும் குறை சொல்வதில்லை. ஆனால், அவர் அரசியலுக்கு வரும் போதுதான் பிரச்சனை. அரசியலில் தமிழர்களுக்கென தனி கோட்பாடு உண்டு. வரலாற்றில் அடிபட்டு வீழ்ந்த இனம் மீண்டு எழும்போது எங்கிருந்தோ வந்தவன் வழி நடத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நிலமே எங்கள் உரிமை என்று ரஜினி திரைப்படத்தில் சொன்னதையே நாங்களும் சொல்கிறோம்.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இப்போது திடீரென எம்.ஜி.ஆரை பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவதால் அ.தி.மு.க.வுக்குத்தான் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும். ரஜினி, கமல் ஆகியோருக்கு ஈழம் பற்றிய நிலைப்பாடு என்ன?ரஜினிக்கும், கமலுக்கும் பாடம் புகட்டுவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்து விடும் என்கிற எண்ணம் மாற வேண்டும். நான் சினிமாவில் இருந்து வந்தவன் என்றாலும் ரசிகர்களை சந்திக்கவில்லை, மக்களைச் சந்தித்தேன். வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

You'r reading ரஜினி, கமலுக்கு பாடம்.. இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது.. சீமான் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனை.. டெல்லியில் 29வது நாளாக போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்