தமிழக தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது..

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 15ம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளார். மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 முக்கிய கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிந்து போட்டியிடும் தொகுதிகளும் வெளியாகி விட்டன. இந்த 2 அணிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்டது. திமுகவில் இன்று(மார்ச்12) பட்டியல் வெளியாகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக அளிக்க வேண்டும். இந்த முறை ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்பாளர்கள் ஊர்வலமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர வேண்டுமென்று தேர்தல் ஆணையம் நிபந்தனை வழங்கியுள்ளது.

You'r reading தமிழக தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்