தடுப்பூசியின் விலையை குறையுங்கள்... மோடிக்கு எடப்பாடி கடிதம்!

இந்தியாவில் முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ளபோதும் மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், இந்த விலை அமெரிக்கா, ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது. ஆனால், இந்த விலை உயர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதில், ``தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading தடுப்பூசியின் விலையை குறையுங்கள்... மோடிக்கு எடப்பாடி கடிதம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்