நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

நாளை தொடங்கும் இந்த கூட்டம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்‍கட்சித் தலைவர்களுடன் மக்‍களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்தினார்.

மழைக்கால கூட்டத் தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் மசோதா, திருநங்கைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தமிழகம் எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டால், அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அ.தி.மு.க எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் தண்டனையை அதிகப்படுத்துவது, தனியார் நிதி நிறுவன முறைகேடுகளை தடுப்பது, மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் என்பன உள்பட 18க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே , எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகா மாநில எம்.பிக்கள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில எம்.பிக்கள் குரல் எழுப்ப உள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விளையாட்டு தூதராக ஹிமா தாஸ் நியமனம்: அசாம் முதல்வர் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்