மேற்குவங்க பாஜக எம்.பி. திரிணாமுல் கட்சிக்குத் தாவல்!

பாஜக சார்பில் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசியல்வாதி சந்தன் மித்ரா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக-விலிருந்து திரிணாமூலுக்கு தாவியுள்ள அவர், ‘சூழ்நிலைகளைப் பொறுத்து எந்த ஒரு மனிதனும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இந்த முடிவை நான் எடுப்பதற்கு ஒரேயொரு விஷயம் தான் காரணமாக இருந்தது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமென்றால் ஒரு சிறப்பான அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த சேவையை செய்ய திரிணாமூல் காங்கிரஸ் தான் சரியான வழி என்று நினைக்கிறேன். அதனால் தான், நீண்ட யோசனைக்குப் பிறகு அதில் சேர நான் முடிவெடுத்தேன்’ என்று கூறியவரிடம், ‘பாஜக-வில் நீங்கள் ஓரங்கட்டப்பட்டதால் தான் கட்சித் தாவினீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘பாஜக எனக்கு நிறைய செய்தது. இரண்டு முறை என்னை ராஜ்யசபா எம்.பி-யாக அவர்கள் தான் ஆக்கினர்.

முக்கியமான பல பொறுப்புகளிலும் இருந்தேன். எனவே, எனக்கு எந்த வித குறையும் அவர்கள் மீது இல்லை’ என்று விளக்கினார். திரிணாமூல் காங்கிரஸ் குறித்தும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறித்தும் மித்ரா காட்டமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மேற்குவங்க பாஜக எம்.பி. திரிணாமுல் கட்சிக்குத் தாவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி பயணம் அரசியல் அல்ல- துணை முதல்வர் ஓபிஎஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்