ஓபிஎஸ் சொந்தப் பயன்பாட்டுக்கு ராணுவ விமானமா?- ஸ்டாலின் கேள்வி

ஓபிஎஸ் தனது சொந்தத் தேவைக்காக ராணுவ ஹெலிகாப்டரை ராணுவ அமைச்சர் மூலமாகவே பெற்றுள்ளார் என்ற கருத்து தற்போது சர்ச்சைக்குரியதாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக எம்.பி மைத்ரேயன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார் பன்னீர்செல்வம்.

இதையடுத்து அவர் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு மைத்ரேயனுடன் சென்றுள்ளார். அங்கு மைத்ரேயனை மட்டும் பார்க்க அனுமதித்துள்ளார் அமைச்சர். பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், ‘இது அரசியல் ரீதியான பயணம் அல்ல. என் சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்காக, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்’ என்று கூறினார்.

இதற்கு ராணுவ அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மைத்ரேயன் எம்.பி-க்கு மட்டும் தான் அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரை சந்திக்கவில்லை’ என்று பதிவிடப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து ஸ்டாலின், ‘ராணுவ ஹெலிகாப்ட்டர் கொடுத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதை வாங்கிப் பயன்படுத்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். ஒரு ராணுவ ஹெலிகாப்டர் எப்படி தனிப்பட்ட நபர் ஒருவரின் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை இது குறித்து வெளியே தெரியாத நிலையில், பன்னீர்செல்வம் மூலமாகவே தற்போது இந்த விஷயம் கசிந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

You'r reading ஓபிஎஸ் சொந்தப் பயன்பாட்டுக்கு ராணுவ விமானமா?- ஸ்டாலின் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போலீசாரால் தேடப்பட்டு வந்த கோவை மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்