நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் பல கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் போராட்டம்

அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்ற வளாகத்தில் பல கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதில், 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 40 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதேபோல், தெலுங்கு தேச கட்சி எம்.பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் எம்.பி. நரமல்லி சிவபிரசாத் இன்று சத்திய சாப் பாபாவை போல் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆந்திர எம்.பிக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்றைய தினம் இந்த பிரச்சினையை எழுப்ப, எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

You'r reading நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி: பாகிஸ்தான் வரவேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்