திமுக தலைவரானார் ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திமுக தலைவரானார் ஸ்டாலின்...

50 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். #DMKThalaivarStalin

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, காலியாக உள்ள திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

இதை யொட்டி, தேர்தலுக்கான வேட்பு மனு 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு செயல் தலைவர் ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

கட்சித் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் மற்றும் மு.க.ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படும் கூட்டம் என்பதால், தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி, ஏராளமான தொண்டர்கள் திரண்டிருப்பதால் அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

You'r reading திமுக தலைவரானார் ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொச்சி விமான சேவை நாளை முதல் முழு அளவில் தொடங்குகிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்