தெலங்கானாவில் மாயாவதி-பவன் கல்யாண் கூட்டணி அமையுமா?

Mayawati-Pawan Kalyan Alliance in Telangana

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தெலங்கானாவில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. பவன் கல்யாணின் திடீர் லக்னோ விஜயம் புதிய கூட்டணியை உருவாகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 119 இடங்களுக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்நிலையில் திடீரென லக்னோ வந்த பவன் கல்யாண், மாயாவதியையும் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்களையும் சந்தித்துள்ளார்.

தலித் தலைவர்களின் நினைவு மண்டபங்களுக்கும் அவர் சென்றார். இது பகுஜன் சமாஜ் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்கக்கூடும் என்ற அனுமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் பிரபலமான ஒரே தலித் ஆளுமையாக மாயாவதி விளங்கி வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமது தரப்பை வலுப்படுத்த இந்த முயற்சியை அவர் எடுக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானாவில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஷிர்புர் மற்றும் நிர்மல் ஆகிய இரு தொகுதிகளில் வென்றது. தற்போது 119 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டாலும், பவன் கல்யாண் இணையும் பட்சத்தில் அவரது ஜன சேனா கட்சிக்கு சில இடங்களை மாயாவதி விட்டுத் தருவார் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுள் என். மகேஷ் வெற்றி பெற்றார். தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்கள் எதிலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை மாயாவதி எடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் இணைந்து அவர் களம் காண்கிறார். ஹரியானாவில் ஏற்கனவே இந்திய தேசிய லோக் தளம் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பகுஜன் சமாஜ், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடவில்லை.

தென்னிந்தியாவில் பலம் பெறும் வண்ணம் மாயாவதி, பவன் கல்யாணின் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.

You'r reading தெலங்கானாவில் மாயாவதி-பவன் கல்யாண் கூட்டணி அமையுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 14 குழந்தைகளுக்கு கத்திகுத்து- சீனாவில் நடந்த கொடூரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்