அமலாக்கத் துறைக்கு புதிய தலைவர்

New Chairman of Enforcement Department

அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்புக்கு முதன்மை சிறப்பு செயலர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கக் துறையின் இயக்குநராக கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி கர்னால் சிங், சனிக்கிழமை (அக்டோபர் 27) ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் டெல்லிக்கான தலைமை ஆணையராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்பு மூன்று மாத காலத்திற்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு பிறப்பித்துள்ளது.

1984ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பெயர் இன்னும் கூடுதல் செயலர் அந்தஸ்துக்கு பட்டியலிடப்படவில்லை. அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்பில் கூடுதல் செயலர் அந்தஸ்தில் உள்ளவரே அமர்த்தப்பட வேண்டும். ஆகவே, மிஸ்ராவுக்கு கூடுதல் பொறுப்பாக அமலாக்கத் துறை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கூடுதல் செயலராக உயர்த்தப்பட்டு, முறையான அந்தஸ்தில் துறையின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண மோசடி குற்றம் தடுப்பு, அந்நிய செலவாணி பரிமாற்ற மேலாண்மை ஆகிய முக்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் துறையாதலால் அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது பணி நிறைவு பெற்ற இயக்குநர் கர்னால் சிங், மிக மிக முக்கிய பிரமுகர்கள் ஹெலிகாப்டர் வழக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியின் வழக்கு, நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோரின் பண மோசடி வழக்கு போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அமலாக்கத் துறைக்கு புதிய தலைவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரு நாட்டு உச்சி மாநாடு- ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்