6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

Taj mahal reopens after 6 months

6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிரசித்தி பெற்ற ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை ஆகியவையும் மார்ச் 17ம் தேதி முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 4ம் கட்ட ஊரடங்கு நிபந்தனை தளர்வுகள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இதன்படி சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எந்த குறைவும் இல்லாமல் அதிகரித்து வருகின்ற போதிலும் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 7 மாநிலங்களில் இன்று முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் பிரசித்திபெற்ற தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. கவுண்டரில் டிக்கெட் வழங்கப்படவில்லை. தினமும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு அதிகாரி வசந்தகுமார் ஸ்வார்ங்கர் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலுக்கு ஒரு வருடத்தில் சராசரியாக 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள ஆக்ரா கோட்டைக்கு 1 வருடத்தில் 30 லட்சம் பேர் வருகின்றனர். இந்த இரண்டு சுற்றுலா தலங்கள் மூலம் உத்திர பிரதேச மாநிலத்திற்கு பெருமளவு வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவை கண்ணாடி தடுக்குமா? ஆய்வில் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்